Thursday, June 28, 2007

பெரியகுளம் நக்சலைட்டுகள்-வழக்கு 'கியூ' பிரிவுக்கு மாற்றம்

ஜூன் 28, 2007

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்டுப் பகுதியில் 3 நக்சலைட்டுகள் சிக்கிய வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதான 3 பேரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்த கியூ பிரிவு போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

பெரியகுளம் அருகே காட்டுப் பகுதியில் நேற்று 3 நக்சலைட்டுகள் பிடிபட்டனர். முத்துச் செல்வம், வேல்முருகன், பழனிவேல் ஆகிய அந்த மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து டெட்டனேட்டர்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக கொடைக்கானல் மலைப்பகுதியில், ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாக தகவல் தெரிய வந்தது. கொடைக்கானலில் இவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்த சேகர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகி விட்டனர்.

அவர்களையும் சேர்த்து மொத்தமாக 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பெரும் நாச வேலையில், ஈடுபடும் திட்டத்துடன்தான் இந்த ஆயுதப் பயிற்சியில், இவர்கள் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு தற்போது கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதான 3 பேரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் 3 நக்சலைட்டுகள் பிடிபட்ட காட்டுப் பகுதியில் இன்று போலீஸார் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது தனியார் ஒருவருக்குச் சொந்தமான பூத் தோட்டத்தில் 2 துப்பாக்கிகள் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு சென்று துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்ற நக்சலைட்டுகள் போட்டு விட்டுச் சென்ற துப்பாக்கிகள்தான் இவை என்பது விசாரணையில் தெரிய வந்தது.

அந்தப் பகுதியை மேலும் தீவிரமாக ஆய்வு செய்து மேலும் ஆயுதங்கள் இருக்கிறதா என்பதை அறிய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அந்த பூத்தோட்டம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

தற்போது பிடிபட்டுள்ள நக்சலைட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல், சட்டம், பாலிடெக்னிக் படிப்பை முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து புதிய படை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.

தங்களது அமைப்புக்கு மக்கள் போர்ப்படை என்ற பெயரையும் இவர்கள் சூட்டியுள்ளனர். இந்த படையில் தற்போது 600 பேர் உறுப்பினர்களாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

தர்மபுரி உள்ளிட்ட நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தற்போது போலீஸ் கெடுபிடி அதிகம் இருப்பதால், தென் மாவட்டங்களில் தங்களது ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ள முடிவு செய்து கொடைக்கானல் மற்றும் தேனி மாவட்ட மலைப் பகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளது இந்தக் கும்பல்.

இந்தக் கும்பலுக்கு முக்கிய கட்சி ஒன்றின் தலைவர் நிதியுதவி செய்து வருவதாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தத் தலைவரின் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து சென்னைக்கு எடுத்துச் சென்று தீவிரமாக விசாரிக்கும்போது மேலும் பரபரப்பான தகவல்கள் கிடைக்கலாம் என போலீஸார் எதிர்பார்க்கிறார்கள்.

No comments: