Thursday, June 21, 2007

ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு - பாட்ஷா விடுதலை- மூவருக்கு ஆயுள் தண்டனை

ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு மூவருக்கு ஆயுள் தண்டனை: பாட்ஷா விடுதலை

சென்னை: சென்னை, சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ்., குண்டு வெடிப்பு வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை தடா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஏழு பேருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷா உட்பட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை, சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் கடந்த 93ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி குண்டு வெடித்தது. இதில், 11 பேர் பலியாயினர். ஏழு பேர் காயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக ரபீக் அகமது, அல்உம்மா பாட்ஷா, பழனி பாபா, இமாம் அலி உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பழனிபாபா, இமாம்அலி ஆகியோர் இறந்து விட்டனர். முஷ்டாக் அகமது என்பவர் தலைமறைவாகி விட்டார். 15 பேர் மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, "தடா' கோர்ட் நீதிபதி டி.ராமசாமி முன் நடந்தது.
ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்குள் சென்று காஜா நிஜாமுதீனும், இமாம்அலியும் குண்டு வைத்ததாகவும், வெளியில் ஹைதர் அலி, அபுபக்கர் சித்திக் இருந்ததாகவும் சி.பி.ஐ., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மற்றவர்கள் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது, குற்றம் செய்ய துõண்டியதாக கூறப்பட்டது.
இவ்வழக்கில் நேற்று நீதிபதி டி.ராமசாமி தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாட்ஷா, முக்தார் அகமது, அமினுதீன் ஷெரீப், முகமது அஸ்லாம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். அபுபக்கர் சித்திக், ஹைதர்அலி, காஜா நிஜாமுதீன் ஆகியோர் மீதான கொலை, சதி, கொடுமையான, சிறிய காயங்கள் ஏற்படுத்துதல் மற்றும் தடா சட்டப் பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற எட்டு பேர் மீது அடைக்கலம் கொடுத்ததாகவும், குற்றம் செய்த துõண்டியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிருபணமாகி உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் தண்டனை குறித்து நீதிபதி கேட்டார். அவர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்றும், அபராதம் விதிக்கக் கூடாது என்றும், பல ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் கருணை காட்ட வேண்டும் என்றும் கூறினர்.
அபுபக்கர் சித்திக், ஹைதர் அலி, காஜா நிஜாமுதீன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஏக காலத்தில் இதனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ரபீக் அகமதுவுக்கு மூன்று ஆண்டுகள், சகாபுதீன், அப்துல் ரகீம், அகமது ஞானியார், முகமது மூசா, சையத் முகமது புகாரி, முகமது அலி, முகமது சுபேர், ஆகியோருக்கு தலா ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த காலத்தை கழித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டது.
சி.பி.ஐ., தரப்பில் சிறப்பு வக்கீல் கீதா ராமசேஷன் வாதாடினார். வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பாட்ஷா சார்பில் வக்கீல் பி.வி.பக்தவத்சலம், முக்தார் அகமது, முகமது அஸ்லாம் சார்பில் வக்கீல் வி.வெங்கட்ராமன், அமினுதீன் ஷெரிப் சார்பில் வக்கீல் சேவியர் பெலிக்ஸ் வாதாடினர்.

1 comment:

Anonymous said...

இதுவல்லவோ நீதி!