Tuesday, June 12, 2007

சென்னையில் மோசடி பிஷப் கூட்டாளியிடம் இருந்து மேலும் ரூ.42 லட்சம் பறிமுதல்

சென்னை : மோசடி பிஷப் யோபுவின் கூட்டாளியான ராமநாதனிடம் 42 லட்சம் ரூபாயை சி.பி.சி.ஐ.டி., போலீசார் மீட்டனர். சில தினங்களுக்கு முன்பாக 26 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலுõர் மாவட்டத்தை சேர்ந்த யோபு சரவணன், "கல்வாரி மிஷன்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டித் தருவதாக கூறி மோசடி செய்தார். வீடுகள் கட்டித்தர முன் வந்த கட்டட ஒப்பந்ததாரர்களிடம், முன்பணமாக லட்சக்கணக்கில் வசூலித்து மோசடி செய்தார்.இந்த மோசடி வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். பல மாதங்களாக தலைமறைவாக இருந்த, யோபுவின் கூட்டாளி ராமநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது நண்பர் சவுத்ரியின் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமநாதனை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். பினாமி பெயரில் கோடிக்கணக்கான சொத்துகளை ராமநாதன் வாங்கி குவித்திருந்தது தெரிய வந்தது. ராமநாதன் அவரது மனைவி தனலட்சுமி பெயரில் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பாதரிவேடு பகுதியில் 20.85 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார்.போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையால் மனைவியின் பெயரில் இருந்த நிலத்தை உறவினர் பாலசுப்பிரமணியம் என்பவரது பெயருக்கு மாற்றினார். பின்பு, உறவினரிடம் பெயரில் இருந்த நிலத்தின் விற்பனை உரிமையை, பொன்னேரியைச் சேர்ந்த நண்பர் சவுத்ரி என்பவருக்கு கொடுத்தார்.கவரைப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் நிலத்தை ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். நிலத்தை விற்ற தொகையை போலீசாருக்கு தெரியாமல் ராமநாதனுக்கு கொடுத்து வந்தார் சவுத்ரி. இத்தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. சவுத்ரியை கண்காணித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சவுத்ரி அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:ஆட்டோ ஸ்பேர்ஸ் விற்பனையுடன் நிலங்களை வாங்கி விற்று வந்தேன். அப்போது ராமநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மனைவி மற்றும் அவரது உறவினர்களின் பெயரில் கோடிக்கணக்கில் நிலங்களை வாங்கி குவித்தார். அதற்கு நான் உதவி செய்தேன். யோபு சரவணன் போலீசில் மாட்டிக் கொண்டதால் பினாமி பெயரில் இருந்த நிலத்தின் விற்பனை உரிமையை எனக்கு கொடுத்தார். 20.85 ஏக்கர் நிலத்தை ஒரு கோடி 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன். நிலத்தை வாங்கியவர் பல தவணைகளாக என்னிடம் பணத்தை கொடுத்தார். அப்பணத்தை ராமநாதனுக்கு கொடுத்தேன். கடைசி தவணையான 42 லட்சம் ரூபாயை ராமநாதனிடம் கொடுக்க சென்றேன். தலைமறைவாக இருந்த ராமநாதன் அத்தொகையை என்னிடம் கொடுத்து வைத்தார். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

சவுத்ரியிடம் இருந்த 42 லட்சம் ரூபாய் ரொக்கத்தை போலீசார் மீட்டனர். இதுவரை யோபு சரவணன் மற்றும் அவரது கூட்டாளியிடம் இருந்து 94 லட்சத்து மூன்றாயிரத்து 700 ரூபாய், 40 சவரன் தங்க ஆபரணம், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 11 விலையுயர்ந்த கார்கள் மற்றும் நான்கு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, காலி மனை ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சொத்துகளை ஏலம் விட அரசுக்கு கடிதம் : கைப்பற்றப்பட்ட சொத்துகளை கையகப்படுத்தி, அதனை ஏலம் விட்டு அத்தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால், சொத்து ஆவணங்களை கையகப்படுத்த அனுமதிக்குமாறு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். ராமநாதனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று வரை போலீசாருக்கு கோர்ட் அனுமதி அளித்திருந்தது. ராமநாதனின் பினாமியிடம் இருந்து ரூ.42 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டதால், நேற்று மாலையே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நன்றி தினமலர்

No comments: