நன்றி தட்ஸ்டமில்
பிணத்தை வைத்து ஜெபம்-'சைக்கோ' சகோதரர் கைது
ஜூன் 07, 2007
கோவை: தற்கொலை செய்து கொண்ட தம்பியின் உடலை 2 மாதமாக வீட்டுக்குள் வைத்து அவரை உயிர்த்தெழச் செய்வதற்காக, அவரது அண்ணன் தனது குடும்பத்தோடு ஜெபம் செய்து வந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு அனுராதா என்கிற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவருக்கு ஐந்து சகோதரர்கள். இவர்களில் மூத்தவரான சார்லஸ் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.
கிறிஸ்தவ போதகராக செயல்பட்டு வந்தார் சார்லஸ். அப்பகுதிகளில் ஜெபம் செய்து பிழைத்து வருகிறார். செல்வக்குமாருக்கு சமீபத்தில் மன நலம் பாதிக்கப்பட்டது. வேலைக்கும் சரியாக செல்வதில்லை.
இதையடுத்து தனது வீட்டுக்கு வருமாறும், அங்கு ஜெபம் செய்து குணப்படுத்துகிறேன் என்று செல்வக்குமாரை கோவைக்கு அழைத்தார் சார்லஸ். அவரும் அண்ணன் வீட்டுக்குப் போனார்.
கடந்த 9 மாதங்களாக சார்லஸ் வீட்டில் தங்கியிருந்தார் செல்வக்குமார். மாதம் ஒருமுரை துவரங்குறிச்சி வந்து குடும்பத்தினரை சந்தித்து விட்டுச் செல்வார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதமாக செல்வக்குமார் வீட்டுக்கு வரவில்லை. இதனால் செல்வக்குமாரின் மனைவி, செல்வக்குமாரின் இன்னொரு அண்ணன் ராஜேந்திரன் ஆகியோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சார்லஸைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அளித்த பதிலில் இவர்களுக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் கோவை விரைந்தனர். வீட்டுக்கு வந்தபோது வீடு வெளிப்புறமாக பூட்டியிருந்தது. இருப்பினும் சந்தேகத்தில் அவர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்து பிண வாடை வீசியது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு ஒரு மேசையில், செல்வக்குமாரின் இறந்து, உருக்குலைந்து, சிதைந்து போன உடல் கிடத்தப்பட்டிருந்தது.
பிணத்தைச் சுற்றிலும் சார்லஸ், அவரது மனைவி சாந்தி, 3 மகள்கள், ஒரு மகன், கீர்த்தி என்கிற பெண் ஆகியோர் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தனர். இந்தக் காட்சியைப் பார்த்ததும் செல்வக்குமாரின் உறவினர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.
சார்லஸை வெளியே அழைத்துச் சென்று என்ன நடந்தது என்று கேட்டனர். அதற்கு சார்லஸ், செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவரை உயிர்ப்பிக்க கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் ஜெபம் செய்து வருவதாக குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 4ம் தேதி செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் சார்லஸ் நாகர்கோவில் சென்றிருந்தார். சாந்தி போன் மூலம் செல்வக்குமாரின் தற்கொலை குறித்துத் தெரிவித்தார்.
அதற்கு சார்லஸ், நான் நேரில் வந்து ஜெபம் செய்து செல்வக்குமாரின் உயிரை மீட்கிறேன். அதனால் யாரிடமும் இதைச் சொல்ல வேண்டாம் என்றாராம். இதனால் சாந்தி யாருக்கும் இதைத் தெரிவிக்கவில்லை.
பின்னர் குடும்பத்தோடு ஜெபம் செய்து வந்ததாக சார்லஸ் கூறுகிறார். ஆனால் அவர் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியவில்லை. போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனையில்தான் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரிய வரும். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment