தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யப்பட்ட வெடிகுண்டுகள் மதுரை, புனலூர், பெங்களூரில் பதுக்கல்
நெல்லையில் நடக்கும் விசாரணையில் பரபரப்பு தகவல்
நெல்லை, ஆக.6-
நெல்லையை தகர்க்க தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யப்பட்ட வெடிகுண்டுகள் மதுரை, பெங்களூர், புனலூரில் பதுக்கிவைத்து இருப்பதாக தீவிரவாதிகளிடம் நடத்திய போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த இடங்களுக்கு போலீசார் விரைந்தனர்.
தமிழகத்தில் சென்னை, நெல்லை மற்றும் பல இடங்களில் ஒரே சமயத்தில் வெடிகுண்டு வைத்து நாசவேலைகள் செய்ய தீவிரவாதிகள் செய்த சதித்திட்டம் போலீசாரால் கடந்த மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது.
அதிரடி வேட்டை
இந்த நாசவேலையில் ஈடுபட்டதாக நெல்லை பேட்டையில் கடந்த மாதம் 26-ந்தேதி தீவிரவாதி அப்துல் கபூரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் வெடிகுண்டுகளை குறித்த நேரத்தில் வெடிக்கச் செய்வதற்கான பொருட்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
அப்துல்கபூரை தொடர்ந்து சென்னையில் நெல்லை டவுனை சேர்ந்த தீவிரவாதி ஹீரா கைது செய்யப்பட்டார். இவர்களை சென்னை புழல் சிறையில் இருந்து இயக்கிய அலி அப்துல்லாவை போலீசார் காவலில் எடுத்து உள்ளனர்.
வெடிகுண்டு லாரி
3 பேரும் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து விசாரிக்கப்படுகிறார்கள். தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் சதித்திட்டத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டது `இறைவன் ஒருவனே' என்ற அமைப்பின் தலைவன் தவ்பீக் என்பது தெரிய வந்தது. இவரது தலைமையில் மொத்தம் 30 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் 15-ந்தேதி பல இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டுள்ளனர்.
சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதிக்கு முதல் நாள் இரவு தீவிரவாதிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நெல்லை, சென்னையில் பயங்கர வெடிகுண்டு சம்பவத்தை நடத்த திட்டமிட்டுள்ளதும், நெல்லையை தகர்க்க ஒரு லாரி நிறைய வெடிகுண்டுகள் நிரப்பி வைத்து இருப்பதாகவும் தெரியவந்தது. மேலும் 15-ந்தேதிக்கு முன்னதாக இந்த லாரியை நள்ளிரவில் செங்கோட்டை வழியாக நெல்லை மாவட்டத்திற்குள் ஊடுருவச் செய்வது என திட்டமிடப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இந்த நிலையில் வெடிகுண்டுடன் வந்த லாரியை தேடும் பணி கேரளாவில் தொடங்கியது. திருவனந்தபுரம், கொல்லம், புனலூர் பகுதிகளில் போலீசார் ஒவ்வொரு லாரியாக சோதனையிட்டு வருகின்றனர்.
5-வது நாளாக விசாரணை
இந்த நிலையில் நேற்று தீவிரவாதிகளிடம் 5-வது நாளாக நேற்று நடந்த விசாரணையில் வெடிகுண்டுகளுடன் வந்த லாரியை கேரளா மாநிலம் புனலூரில் மறைத்து வைத்திருப்பதாகவும், பெங்களூர், மதுரையிலும் குண்டுகளை மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த இடங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கிய பிரமுகர் தொடர்பு
தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவருடைய செல்போன் நம்பர் இவர்களுடைய செல்போனில் பதிவாகி உள்ளது.
இதனால் அந்த முக்கிய பிரமுகரும், இந்த தீவிரவாதிகளும் என்ன பேசி உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment