கூலி பிரச்சனை - மக்கள் மறியல் - போலீஸ் துப்பாக்கிச் சூடு
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 17, 2008
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் எஸ்ஐ தாக்கப்பட்டனர்.
திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் தேசிய ஊரக உறுதித் திட்டத்தில் பணிகள் நடந்தன. இப்பணிக்கு நாள் வீதம் ரூ.80 கூலி அறிவிக்கப்பட்டது. ஆனால் வேலை குறைவாக நடந்ததால் கூலியும் குறைத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பெண்கள் உள்பட அப்பகுதி மக்கள் 500 பேர் திண்டிவனம் ரெட்டணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்த திண்டிவனம் தாசில்தார் கல்யாணம், மயிலம் பிடிஒ இளங்கோ ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளுக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பெரிய தச்சூர் போலீஸாருக்கு தாசில்தார் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் ரெட்டணைக்கு வந்தனர். வாகனத்தில் இருந்து இறங்கிய போலீஸார் பெண்கள், மூதாட்டிகள், பொது மக்கள் என்று அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். பேசிக் கொண்டிருக்கும்போது ஏன் அடிக்கிறீர்கள் என்று ரெட்டணை மார்க்சிஸ்ட் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போலீஸாரிடம் கேட்டார்.
இதையடுத்து அவர்கள் மீதும் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் அங்கிருந்து சென்றனர். சிறிது நேரம் கழித்து அதிரடிப்படை போலீஸார் அங்கு வந்தனர்.
மறியலில் ஈடுபட்டிருருந்த பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பின்னர் நான்கு ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது நண்பர்களோடு விளையாடிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் மூர்த்தியின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.
போலீஸாரின் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ரெட்டணை பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எஸ்பி அமல்ராஜ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
ராமதாஸ் கண்டனம்
போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீஸாரின் நடவடிக்கை குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment