Sunday, August 31, 2008

நோட்டுக்கு ஓட்டு: பிரதமர், சோனியா மெளனம் ஏன்? - அத்வானி

நோட்டுக்கு ஓட்டு: பிரதமர், சோனியா மெளனம் ஏன்? - அத்வானி
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31, 2008


டெல்லி: லோக்சபாவில் நடந்த நம்பிக்ைக வாக்கெடுப்பின்போது பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்க முயன்ற விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மெளனம் சாதித்து வருவது ஏன் என்று பாஜக தலைவர் அத்வானி கேட்டுள்ளார்.

பாஜக அரசியல் மற்றும் சட்டப் பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆட்சித் திறனும், அரசியலும் என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டை தொடங்கி வைத்து அத்வானி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், நல்ல அரசியலின் வெளிப்பாடுதான் நல்லாட்சி. ஆனால் நன்கு செயல்பட்டு வரும் சில எம்.பிக்களின் வெற்றி வாய்ப்புகளை சீர்குலைக்கும் வகையில் தற்போது தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1974ம் ஆண்டு நாட்டின் மீது திணிக்கப்பட்ட எமர்ஜென்சியை விட மோசமான தாக்குதல் இது.

கடந்த நான்கு ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள எந்த அமைச்சர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இருந்தும் இந்த ஆட்சி இத்தனை காலம் நீடித்திருக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒருவர் மீதான நம்பிக்கை மட்டுமே காரணம். அவரது தனிப்பட்ட கிளீன் இமேஜ்தான் இந்த அரசை தாங்கிப் பிடித்துள்ளது.

ஆனால் நோட்டுக்கு ஓட்டு ஊழல் விவகாரம் அம்பலப்படுத்தப்பட்ட உடன், டாக்டர் மன்மோகன் சிங்கும் ஊழல் அரசியல்வாதிதான் என்பது வெளிப்பட்டுவிட்டது. பதவியில் நீடிக்க அவரும் எது வேண்டுமானாலும் செய்வார் என்பது நிரூபணமாகி விட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் குழு விசாரித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் பாஜக எம்பிக்கள் மன்மோகன் சிங் அரசின் ஊழலை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியதை கண்டுள்ளது.

இதுகுறித்து பிரதமரும், சோனியா காந்தியும் மெளனம் சாதித்து வருகிறார்கள். அவர்கள் மெளனம் கலைந்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன்பு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் அந்தத்தோல்வியை நாங்கள் ஒத்துக்கொண்டோம். அந்த ஒரு ஓட்டும் கூட திருட்டுத்தனமான ஓட்டுதான். அப்போதைய ஒரிசா முதல்வர் லோக்சபா உறுப்பினராகவும் இருந்ததால் நாங்கள் தோல்வி அடைய நேரிட்டது.

ஆனால் அப்போது யாரும் எங்களைப் பார்த்து குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக புகார் கூறவில்லை. நாடாளுமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டோம். மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்டம் மற்றும் நீதித்துறை சீரமைப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். நல்லாட்சிக்கு இவை மிகவும் முக்கியம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தீவிரவாத குற்றங்களைத் தடுப்பதில் மெத்தனமாக இருக்கிறது. இது அதிர்ச்சி தருகிறது. தீவிரவாதத்தைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒழித்து விட்டது. இதனால் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் தண்டிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நம்மைச் சுற்றிலும் உள்ள நாடுகள் தோல்வி அடைந்த நாடுகள். வங்கதேசத்திலிருந்து ஊடுறுவியுள்ள தீவிரவாதிகள் வட கிழக்கு மாநிலங்கள் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளனர். இது பெரும் கவலைக்குரிய அம்சமாகும்.

பாதுகாப்பற்ற ஒரு நாட்டால், நல்லாட்சியைத் தர முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், நாட்டை பாதுகாப்பற்ற நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்றார் அத்வானி.

No comments: