Wednesday, August 01, 2007

கோவை குண்டுவெடிப்பு: ஒரு ஃபிளாஷ்பேக்!

ஆகஸ்ட் 01, 2007

கோவை: கோவை மாநகரை புரட்டிப் போட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியை திருப்பிப் பார்ப்போம்.

நவம்பர் 29, 1997. இதுதான் கோவை மாநகரின் தலையெழுத்து மாறிப் போக முக்கிய காரணமாக அமைந்த நாள். இந்த நாளில்தான் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அல் உம்மாவினர்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து கோவையில் கலவரம் வெடித்தது. 17 முஸ்லீம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா தாக்கப்பட்டார்.

இதற்குப் பழிவாங்கும் வகையில், 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோவை நகரை உலுக்கும் வகையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. மொத்தம் 19 குண்டுவெடிப்புகள் நடந்தன. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அல் உம்மா, அகில இந்திய அல் ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. கோவை நகரின் 24 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கோவை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

வழக்கில் முதல் குற்றப் பத்திரிக்கை 1998ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இறுதிக் குற்றப்பத்திரிக்கை 1999ம் ஆண்டு மே 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

2000மாவது ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 2001ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

சாட்சிகள் விசாரணை 2002ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி தொடங்கியது. வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது.

No comments: