புதுதில்லி, ஆக. 28: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் தாக்கிய பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் இச் சம்பவத்தை விசாரித்த ஆணையம், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 35 வயது பெண்ணை சிலர் இழுத்துச் சென்று கற்பழித்துவிட்டு, சாலையோரத்தில் விட்டுச் சென்றனர்.
சமூக நல அமைப்பைச் சேர்ந்த சிலர் அந்தப் பெண்ணை போச்சம்பள்ளியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, அப் பெண்ணின் சொந்த ஊரான கிட்டானூருக்கு அவரைக் கொண்டு சென்றனர். அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்ததும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை ஊருக்கு வெளியே ஒரு புதரில் வீசி எறிந்துவிட்டனர்.
இந்தச் செய்தி அறிந்ததும், அதே சமூக நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணை கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிக்சைக்காக கொண்டுசென்றனர். எச்ஐவி சோதனை செய்யப்படும்வரை அங்கும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
கருணையற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம், ஒரு பெண்ணுக்கு எதிரான உச்சகட்ட மனித உரிமை மீறல் என ஆணையம் கூறியுள்ளது.
"உடம்பில் இருக்கும் வலியோடு, மருத்துவமனைக்கு வந்த பார்வையாளர்களும் பிற நோயாளிகளும் நடத்திய விதத்தால் அப் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்' என ஆணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment