Sunday, August 26, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்பின் பின்னே ஹர்கத் உல் ஜிகாதி


ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி
புதுடில்லி : ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த முகமது அப்துல் சாகத் என்ற பிலால் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பிலால் ஏற்கனவே கடந்த மே மாதம் ஐதராபாத் மெக்கா மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்புகளும் மொபைல் போன் மூலமாக இயக்கி நிகழ்த்தப்பட்டவை என சந்தேகிக்கப்படுகிறது. மெக்கா மசூதியில் கடந்த மே மாதம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பும் இதே போன்று மொபைல் போன் மூலம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தில் பயங்கரம் * அடுத்தடுத்த குண்டு வெடிப்பில் 35 பேர் உடல் சிதறி பலி * பூங்கா, ஓட்டலில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்


ஐதராபாத்: ஐதராபாத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 35 பேர் உடல் சிதறி பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பதட்டம் உருவாகியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரில் உள்ள மெக்கா மசூதியில் மே 18ம் தேதி குண்டு வெடித்ததில் பலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐதராபாத் நகரில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நெக்லேஸ் ரோட்டில் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு சொந்தமான `லும்பினி பார்க்' என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. இதன் அருகேதான் தலைமை செயலகமும் உள்ளது. விடுமுறை தினம் என்பதால், நேற்று பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 8 மணிக்கு இங்கு உள்ள திறந்தவெளி அரங்கத்தில் `லேசர் ஷோ' நடந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து ஓடத் துவங்கினர். குண்டு வெடிப்பில் பலர் உடல் சிதறி இறந்தனர். இங்கு வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் பலரும் துாக்கி எறியப்பட்டனர். குண்டு வெடித்த சில விநாடிகளில் அந்த இடமே ஒரு போர்களம் போல காட்சி அளித்தது.

இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த அடுத்த 15வது நிமிடத்தில் கோட்டி என்ற இடத்தில் உள்ள `கோகுல் சாட்' உணவகத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது உணவகத்தின் உள்ளே ஏராளமான மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். இந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் பெண்கள், குழந்தைகள் 35 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர் என்று முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் அடைந்தவர்கள் மெடி சிட்டி, காந்தி, ஓஸ்மேனியா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளை போலீசார் சுற்றி வளைத்தனர். அத்துடன் நகரில் உள்ள மற்ற சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

டில்லியில் மத்திய உளவுத் துறை அமைச்சகம் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தது. உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆந்திர உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக உயர் மட்டக் குழு கூட்டத்தை கூட்டி மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ரெட்டி ஆலோசனை நடத்தி, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த `லும்பினி பார்க்' கேளிக்கை பூங்காவில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தோஷமாக பொழுதைக் கழிக்க பூங்காவிற்கு வந்தவர் குண்டு வெடிப்பு மரணம் அடைந்ததைப் பார்த்து உயிர் பிழைத்த அவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பயங்கரவாதிகளே காரணம் என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்.டி.எக்ஸ்., ரக குண்டுகள் வெடித்து இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

அமைதி காக்க வேண்டுகோள் ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கூறுகையில்,"குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் பீதி அடைய வேண்டாம். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய இடங்களில் போலீசார் ரோந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடங்களுக்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இதுபோன்ற பதட்டமான நேரங்களில் மக்கள் அமைதி காக்க வேண்டும். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்,"என்றார்.

முக்கிய நகரங்களில் `ரெட் அலர்ட்': குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஐதராபாத் நகரம் போலீசாரால் `சீல்' வைக்கப்பட்டது. கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் முக்கிய நகரங்களில் `ரெட்-அலர்ட்' செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணி ஒரு புறம் நடந்து வரும் நிலையில் போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். உளவுப் பிரிவினர் துப்புத் துலக்குவதில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்துக்கு இடமானோரின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். எங்கும் பரபரப்பு நிலவியது. இந்த பயங்கர சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய புலனாய்வு பிரிவினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பை பலப்படுத்தவும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்தனர்.

உணவகத்தில் மட்டும் 24 பேர் பலி முதல்வர் ரெட்டி அதிர்ச்சி தகவல்: ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த லும்பினி பார்க் மற்றும் கோகுல் சாட் உணவகம் இரண்டும் ஐந்து கி.மீ., இடைவெளியில் உள்ளன. இதில், உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மட்டும் 24 பேர் கொல்லப்பட்டதாக ஆந்திர முதல்வர் ரெட்டி தெரிவித்தார். லேசர் ஷோ நடந்த அரங்கில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது 500 பார்வையாளர்கள் இருந்துள்ளனர். லேசர் ஷோ துவங்கிய சில நிமிடங்களில் குண்டு வெடித்து விட்டது. அரங்கின் நடுப்பகுதியில் உள்ள இருக்கைகள் அருகே குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் தான் காரணம் என்றும் முதல்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அதே ரக குண்டுகள் தான் நேற்றைய சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஆந்திர போலீசாரின் கணிப்பு.

நன்றி தினமலர்

No comments: