இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரிகள் கூட்டம்?
புதுதில்லி, ஆக.27: அணுசக்தி உடன்பாடு குறித்து பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் இடதுசாரிகளின் கூட்டம் திங்கள்கிழமை தில்லியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில் அணுசக்தி உடன்பாடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைக்கு ஒரு வழியாக நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அணுசக்தி உடன்பாட்டால் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது. அதேவேளை, அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைபடுத்துவது குறித்து மத்திய அரசும் மேல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்ற முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தார். இதையடுத்து மார்க்சிஸ்ட்டின் முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூடி விவாதித்தனர்.
அணுசக்தி உடன்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன் இடதுசாரிகளுடன் வெளியில் விவாதிக்க காங்கிரஸ் முடிவெடுத்தது.
முன்னதாக, சனிக்கிழமை இடதுசாரிகள் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு குறித்த கருத்தை தலைவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
No comments:
Post a Comment