Wednesday, August 22, 2007

சபரிமலையில் பெண்களுக்கு தனி சீசன் துவங்க முடிவு

சபரிமலையில் பெண்களுக்கு தனி சீசன் துவங்க முடிவு * சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு பதில் மனு தாக்கல்

நாகர்கோவில் : சபரிமலை கோவிலில் பெண்களுக்கு தனி சீசன் துவங்கும் திட்டத்தை கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இதை கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுதாகரன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் அவர் நிருபர் களிடம் கூறியதாவது: சபரிமலையில் தந்திரி நியமனம் தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை. தந்திரி பணி உரிமை ஆலப்புழா மாவட்டம் செங்கன்னுõர் தாழமண் குடும்பத்திடம் உள்ளது. மூத்த தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு உள்ளார். ஆவணி 1ம் தேதி முதல் இவர்தான் இங்கு பணியாற்ற வேண்டும். வயோதிகம் காரணமாக மகன் மோகனரருவை தந்திரி கடமையாற்ற வைக்க அவர் விரும்பினார். மோகனரரு மீது வழக்குகள் உள்ளதால் தேவசம்போர்டு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விஷயம் தொடர்பாக கண்டரரு மகேஸ்வரரு கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ளது. மோகனரரு பணியாற்றக்கூடாது என்று தேவசம்போர்டு சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

கடந்த மண்டல மகரவிளக்கு காலத்தில் நான்கரை கோடி பக்தர்கள் அய்யப்பன் கோவிலில் குவிந்தனர். 105 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. பக்தர்களுக்கு வசதியை பெருக்க மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் இரண்டரை லட்சம் பேர் தங்க வசதி செய்தல், சன்னிதானம் மற்றும் பம்பையில் கழிவு பொருட்களை அகற்றுதல், சுகாதாரத்தை பாதுகாத்தல் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்ற கருத்தில் அரசு உறுதியாக உள்ளது. திருவிதாங்கூர் மகாராஜா குடும்பத்தை சேர்ந்த அம்மாராணி சபரிமலை சென்றதாக சட்டசபையில் நான் குறிப்பட்டேன். அரண்மனை செயலர் அதை மறுத்தார். அதன்பின் அந்த விவகாரத்தை கிளற விரும்பவில்லை.

சபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்க கேட்டு டில்லியை சேர்ந்த பெண் வக்கீல்கள் தொடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட், அரசின் கருத்தை கேட்டது. அரசு பதில் மனுவை தாக்கல் செய்து விட்டது. பெண்களை சபரிமலையில் ஏன் அனுமதிக்கவில்லை என்பதை அதில் விளக்கியுள்ளதோடு, தற்போதைய காலநிலையில் அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளோம். பெண் களுக்காக தனியாக ஒரு சீசன் தொடங்குவது பற்றியும் அதில் கூறியுள்ளோம். இந்த சீசனில் கோவில் ஊழியர்களை தவிர, எந்த ஆண்களுக்கும் அனுமதியில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். பெண்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்தால், போலீசார் உதவியுடன் பம்பையில் தடுப்போம்.நவம்பர் 16ம் தேதி மண்டல சீசன் தொடங்குகிறது. இதற்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கி விட்டது. பாதுகாப்பு பணயில் ஈடுபடும் போலீசாருக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும். இவ்வாறு சுதாகரன் கூறினார்.

தேவபிரசன்ன விவகாரம் நடிகை ஜெயமாலா அப்ரூவர் : தேவபிரசன்ன விவகாரத்தில் நடிகை ஜெயமாலாவை அப்ரூவராக்கி, உன்னி கிருஷ்ண பணிக்கர் மீது வழக்குத் தொடரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கன்னட நடிகை ஜெயமாலா விவகாரத்தில் விசாரணை நடத்தி குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஜெயமாலாவை இந்த விஷயத்தில். உன்னிக்கிருஷ்ண பணிக்கள் பலிக்கடா ஆக்கியுள்ளார். பணிக்கர் கூறியதைதான் ஜெயமாலா கூறியுள்ளாரே தவிர, அவர் கோவிலுக்கு செல்லவில்லை. ஜெயமாலாவை அப்ரூவராக்கி, உன்னி கிருஷ்ண பணிக்கர் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுதாகரன் தெரிவித்தார்.

.
நன்றி தினமலர்

No comments: