ஹைதராபாதில் இன்று முழு அடைப்பு
ஹைதராபாத், ஆக. 27: இரட்டைக் குண்டுவெடிப்புகளைக் கண்டித்து ஹைதராபாதில் திங்கள்கிழமை முழு அடைப்பு நடத்த பாரதீய ஜனதா கட்சி, விசுவ ஹிந்து பரிஷத் ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பு குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆலோசனை கலந்ததாகவும், அவர்கள் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்ததாகவும் ஆந்திர பாரதீய ஜனதா தலைவர் பண்டாரு தத்தாத்ரேய ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்த முழு அடைப்புக் கிளர்ச்சியிலிருந்து குடிநீர், மருத்துவம், ஆம்புலன்ஸ், பால், செய்திப் பத்திரிகைகள் ஆகிய துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வன்செயல்களைக் கண்டித்துத்தான் இந்த முழு அடைப்பு என்பதால் முழு அமைதி காக்குமாறு நகர மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பாரதீய ஜனதா, விசுவ ஹிந்து பரிஷத் ஆதரவாளர்கள் குண்டுவெடிப்பு நடந்த துரித உணவகம் உள்ள கோத்தி பகுதியில் ஊர்வலமாகச் சென்றனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக கோஷமிட்டனர். பாகிஸ்தான் நாட்டுக் கொடிகளைத் தீவைத்து எரித்தனர்.
பயங்கரவாதச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பண்டாரு தத்தாத்ரேய குற்றஞ்சாட்டினார்.
தினமணி
No comments:
Post a Comment