கோவை குண்டுவெடிப்பு: பாஷா உள்பட 153 பேர்
குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஆகஸ்ட் 01, 2007
கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா தலைவர் பாஷா உள்பட 153 பேரை நீதிமன்றம் இன்று குற்றவாளிகளாக அறிவித்தது.
அதே நேரத்தில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார்.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 58 பேர் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பாஜக அலுவலகம், ரயில் நிலையம், சண்முகம் ரோடு, கனி ராவுத்தர் வீதி ஆகிய இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன.
பாஜக தலைவர் அத்வானி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவிருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களிலும் குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் அப்ரூவராக மாறிவிட்டார். இந்த வழக்கை விசாரிக்க கோவை மத்திய சிறை வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
சுமார் 2,000 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். போலீசார் 17,000 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். கடந்த 9 ஆண்டுளாக நடந்து வந்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று முதல் படிப்படியாக தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை முதல் கட்டமாக மதானி, பாஷா உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து 15 பேர் கொண்ட குழுவாக மொத்தம் 166 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மீதான தீர்ப்பை நீதிபதி வாசித்தார்.
அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி, பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, தாஜூதீன், நவாப் கான், பாசிக், முகம்மத் பாசிக், முகம்மது அலி கான் உள்ளிட்ட உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவர்கள் மீதான கிரிமினல் சதித் திட்டம், மத ஒற்றுமையை சீர்குலைத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இவர்களில் பாட்ஷா உள்ளிட்ட 73 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த சதித் திட்டம், ஆயுதங்கள் பதுக்கியது உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீது சுமத்தப்பட்ட சதித் திட்டம், மத வெறியைத் தூண்டும் பேச்சு, வெடிபொருட்களை கேரளாவிலிருந்து கோவைக்குக் கொண்டு வந்தது உள்ளிட்ட புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார்.
மேலும் 5 பேருக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்த நீதிபதி உத்திராபதி அவர்கள் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
அன்றைய தினமே அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை விவரமும் வெளியிடப்படவுள்ளது.
மொத்தம் உள்ள 168 பேரில் ஒருவர் விசாரணையின் போதே இறந்து விட்டார், ஒருவர் அப்ரூவராகி விட்டார். இதனால் மிச்சமுள்ள 166 பேரில் இன்று 5 பேர் தவிர மற்ற 161 பேர் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
இன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ள 80 பேரும் ஆகஸ்ட் 6ம் தேதி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 9 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் நான்கு பேர் சிறு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
தீர்ப்பையொட்டி கோவை மற்றும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவை நகருக்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது. அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. குறிப்பாக கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் படு தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.
நகரில் உள்ள பேருந்து நிலையங்கள், பெரியகடை வீதி, ஒப்பணகார வீதி உள்ளிட்ட முக்கிய இடங்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையம், பாலங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
கோவை நகரின் பாதுகாப்புக்காக அண்டை மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களிலிருந்தும் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
நன்றி: தட்ஸ்டமில்
No comments:
Post a Comment