Tuesday, August 07, 2007

நக்சலைட்டுகள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை

தமிழ்நாட்டில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது
நக்சலைட்டுகள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை
முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., தேவாரம் பேச்சு


திருப்பத்தூர், ஆக.7-

தமிழ்நாட்டில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது நக்சலைட்டுகள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. தேவாரம் கூறினார்.

வீரவணக்கநாள் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த 1980-ம் ஆண்டு நக்சலைட்டுகள் நடமாட்டம் இருந்தது. நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்காக தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டிருந்தது. அந்த பணியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டுகள் முருகேசன், ஏசுதாஸ் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் 3 பேரும் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியானார்கள். இவர்களின் நினைவாக திருப்பத்தூர் டவுண் போலீஸ் நிலையத்தில் நினைவு சின்னம் வைக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் அவர்கள் இறந்த தினமான ஆகஸ்ட் 6-ந் தேதியை திருப்பத்தூர் சரகத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் பொது மக்கள் வீர வணக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள நினைவு சின்னம் முன்பு வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

மலர் வளையம் வைத்து

அஞ்சலி

இதில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., டபிள்ï.ஐ.தேவாரம், வேலூர் சரக டி.ஐ.ஜி., சுந்தரமூர்த்தி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம், கிï பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், டி.கே.ராஜா எம்.எல்.ஏ., பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.பொன்னுசாமி, திருப்பத்தூர் நகரசபை தலைவி சொக்கம்மாள் துணைத் தலைவர் சாந்தி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது காவலர்கள் வானத்தை நோக்கி சுட்டு வீர வணக்கம் செலுத்தினர். பின்னர் போலீசார் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., டபிள்ï.ஐ.தேவாரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

நினைவு சின்னம்

27 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் சேவை செய்து உயிர் நீத்த காவலர்கள் நினைவாக நாம் ஆண்டுதோறும் இங்கு கூடி வருகிறோம். முதன் முதலில் வீர வணக்க நாள் இங்கு செலுத்திய சமயத்தில் இருந்தவர்கள் இப்போது குறைந்து கொண்டே வருகின்றனர். ஆனால் தற்போது ஏராளமான புதியவர்கள் இங்கு கூடி வந்து உள்ளனர்.

சந்தன கடத்தல் வீரப்பனால் 30-க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர். இதில் 7 போலீசாரும், 5 வனத்துறையினரும் அடங்குவர். ராஜீவ்காந்தி படுகொலையின் போது அவருடன் இறந்த 13 பேரில் 11 பேர் போலீசார். அங்கெல்லாம் போலீசாருக்கு என்று நினைவு சின்னம் அமைக்கப்படவில்லை. திருப்பத்தூரில் மட்டும் தான் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

நக்சலைட்டு ஒழிப்பில் போலீசாருடன் பொது மக்கள் இணைந்து செயல்பட்டனர். அதனால் தான், இங்கு போலீசார், பொது மக்கள் என வித்தியாசம் இல்லாமல் ஏராளமானோர் வந்து இருக்கின்றனர்.

பொது மக்கள் ஒத்துழைப்பு இருப்பதால் தான் நக்சலைட்டுகளை ஒழிக்க முடிகிறது. தமிழகத்தில் எந்த அரசும் தீவிரவாதத்திற்கு ஒரு போதும் அனுமதி அளிப்பதில்லை.

கவலைப்பட வேண்டாம்

தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் தலையீடு, பொதுமக்கள் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நக்சலைட்டுகள் குறித்து பொது மக்கள் இனி பயப்பட தேவை இல்லை.

இவ்வாறு தேவாரம் பேசினார்.

முடிவில் திருப்பத்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ராகர்க் நன்றி கூறினார்.

நன்றி தினத்தந்தி
---

நக்சலைட்டுகள் தற்போது இணையத்துக்கு குடிபெய்ர்ந்துள்ளார்கள் போலிருக்கிறது.

இணைய பொதுமக்கள் மட்டுமே பயப்பட வேண்டும்போல இருக்கிறது.

No comments: