Tuesday, August 07, 2007

டெல்லியை தாக்கப்போவதாக இஸ்லாமிய பயங்கரவாத அல்-கொய்தா மிரட்டல்

டெல்லியை தாக்கப்போவதாக அல்-கொய்தா மிரட்டல்:
மத்திய அரசு உஷார் நிலை
சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு


டெல்லியை தாக்கப்போவதாக அல்-கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உஷார் படுத்தி உள்ளது. சுதந்திர தின விழாவுக்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதுடெல்லி, ஆக. 7-

பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா இயக்கம், அமெரிக்காவையும், இங்கிலாந்து உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகளையும் குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மிரட்டல்

கடந்த 2 மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் புஷ்சை கடுமையாக எச்சரித்து, அல்-கொய்தா வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் முஸ்லிம் நாடுகளில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் விலக்கி கொள்ளாவிட்டால், நிïயார்க் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001, செப்டம்பர் 11-ந் தேதி நடந்த தாக்குதலை காட்டிலும், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

டெல்லியை தாக்குவோம்

இந்த நிலையில் அல்-கொய்தா புதிய வீடியோ கேசட்டை வெளியிட்டு உள்ளது. இந்த கேசட், 1 மணி நேரம், 17 நிமிடங்கள் ஓடுகிறது.

முதலில், அல்-கொய்தாவின் முத்திரை பின்னணியில் தெரிய, ஒரு குரல் ஒலிக்கிறது. அதில், இந்தியா மற்றும் அமெரிக்க தூதரகங்கள் எங்களின் சட்டப்பூர்வ தாக்குதல் இலக்காகும் என்று ஒருவர் எச்சரிக்கிறார்.

காஷ்மீரில் அமெரிக்க துணையுடன் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை இந்தியா கொன்றுள்ளது. எனவே இந்தியாவை தாக்குவோம். மேலும் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவோம். டெல்லி, மாஸ்கோ, டெல்-அவிவ் ஆகிய நகரங்களை தாக்குவது எங்களின் சட்டப்பூர்வ உரிமை என்று அந்த நபர் கூறுகிறார்.

தீவிரவாதி பேச்சு

அதைத் தொடர்ந்து அல்-கொய்தாவை சேர்ந்த ஆதம் கதன் என்பவன் வீடியோவில் தோன்றி பேசுகிறான்.

"எண்ணை வளமிக்க வளைகுடா அரபு நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களும், அமெரிக்க தூதரகங்களும் எங்களின் முக்கிய தாக்குதல் இலக்காகும். நீங்கள் எங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குறி வைத்து தாக்குகிறீர்கள். இதுபோல நாங்களும் அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்'' என்று அவன் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இவன் மீது, அந்நாட்டில் தேச துரோக குற்றச்சாட்டு உள்ளது. தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இவனது தலைக்கு, அமெரிக்கா ரூ.5 கோடி பரிசு அறிவித்து உள்ளது.

மிரட்டலை சந்திக்க தயார்

இதற்கிடையே அல்-கொய்தாவின் மிரட்டலை தொடர்ந்து மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை உஷார் படுத்தி உள்ளது. அல்-கொய்தா தீவிரவாதிகளின் எந்த மிரட்டலையும் சந்திக்க தயாராக இருப்பதாக மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அல்-கொய்தாவின் மிரட்டலை உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் இதுபோன்ற மிரட்டல்களை சந்திக்க நமது பாதுகாப்பு படைகளும், அரசும் தயாராக உள்ளன. தீவிரவாதிகளின் முயற்சிகளை முறியடிக்க பாதுகாப்பு படையினர் உஷாராக உள்ளனர்.

எனவே இதுபோன்ற மிரட்டல்களை கண்டு நாட்டு மக்கள் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார்.

உயர்மட்ட கூட்டம்

இதற்கிடையே மத்திய அரசின் உள்துறை செயலாளர் மதுக்கர் குப்தா தலைமையில் டெல்லியில் நேற்று உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. உளவுத்துறை மூத்த அதிகாரிகள், சிறப்பு பாதுகாப்பு படை இயக்குனர் பி.வி.வான்சூ, டெல்லி போலீஸ் தலைவர் ஓய்.எஸ்.தத்வால், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வரும் 15-ந் தேதி நாட்டின் சுதந்திர தினம் வருவதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனாலும் இப்போது அல்-கொய்தா மிரட்டல் எதிரொலியாக வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத இயக்கங்களிடம் இருந்து அச்சுறுத்தல்கள் உள்ளதா? என்று கூட்டத்தில் ஆராயப்பட்டது. அப்போது ஜம்மு-காஷ்மீர், குஜராத் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட உளவுத் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டன.

கடும் பாதுகாப்பு

பின்னர் சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தேசிய கொடி ஏற்றும் செங்கோட்டையில் பாதுகாப்பை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக முக்கிய இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிக்கவும், தீவிரவாத தாக்குதலை முறியடிக்க விமான எதிர்ப்பு பீரங்கிகளை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது.

டெல்லியில் தீவிரவாதிகள் யாராவது தங்கி உள்ளனரா? என்று கண்டறிய ஓட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடத்தவும், வெடிகுண்டு தாக்குதல்களை தடுக்க முக்கிய இடங்களை கண்காணிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

விமான நிலையங்கள் உஷார்

மேலும் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கவும், நிலைமையை சமாளிக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிவிரைவு படையினரை தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

No comments: