Sunday, August 05, 2007

கடலூர் மீனவ கிராமங்களில் பா.ஜ.க.

நன்றி தினத்தந்தி
கடலூர் மீனவ கிராமங்களில் பா.ஜ.க.வினர் குறைகளை கேட்டறிந்தனர்
விரும்பும் இடத்தில் வீடு கட்டி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை


கடலூர், ஆக.5-


கடலூர் மீனவ கிராமங்களில் பா.ஜ.க.வினர் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது தாங்கள் விரும்பும் இடத்திலேயே வீடுகட்டி தர வேண்டும் என அவர்களிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடற்கரை மாமன்றம்

பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் அணி சார்பில் திருவெற்றிïர் முதல் திருச்செந்தூர் வரையுள்ள மீனவ கிராமங்களில் கடற்கரை மாமன்றம் என்ற தலைப்பில் மீனவர்களை நேரில் சந்தித்து குறைகேட்கும் நிகழ்ச்சி சென்னை திருவொற்றிïரில் கடந்த 30-ந் தேதி தொடங்கியது.

இதை தொடர்ந்து கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களுக்கு நேரடியாக சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள். அதன்படி நேற்று காலை கடலூர் மாவட்டத்தில் மாநில மீனவர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் இணை அமைப்பாளர்கள் கண்ணன், சாந்தகுமார் ஆகியோர் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் வீடு வீடாக சென்று குறைகளை கேட்டறிந்தனர்.

இதில் மாவட்ட பொது செயலாளர் வரதராஜன், துணை தலைவர் செல்வகுமார், செயலாளர் முரளி, மாநில இளைஞரணி செயலாளர் குணசேகரன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் டேவிட், ஒன்றிய அமைப்பாளர் பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விரும்பும் இடத்தில்...

பின்னர் மீனவர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் கூறியதாவது:-

கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறேன். அப்போது மீனவர்கள் விரும்பும் இடத்திலேயே வீடு கட்டி கொடுக்க வேண்டும், நிவாரண உதவியை உபகரணங்களாக வழங்குவதற்கு பதில் பணமாக தர வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

மீனவர்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி திருச்செந்தூரில் வருகிற 9-ந் தேதி நிறைவடைகிறது. அப்போது மீனவர்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளையும், குறைகளையும் கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் நான் அறிக்கையாக கொடுப்பேன். பின்னர் இது தொடர்பாக வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சரையும், அதை தொடர்ந்து திருநாவுக்கரசு எம்.பி. தலைமையில் டெல்லியில் பிரதமரையும் சந்தித்து பேச இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து தாழங்குடா, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை ஆகிய கடலோர கிராமங்களுக்கும் சென்று மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

No comments: