நன்றி தினத்தந்தி
--
இந்து கோவிலில் இருந்து
இலங்கை ராணுவத்தை வெளியேற்றக்கோரி திருச்சியில் 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சி உள்பட 3 அமைப்புகள் அறிவிப்பு
திருச்சி, ஆக.5-
இந்து கோவிலில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்றக்கோரி திருச்சியில் வருகிற 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி உள்பட 3 அமைப்புகள் அறிவித்துள்ளன.
இலங்கை ராணுவம்
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜ×ன் சம்பத், தனித்தமிழர் சேனை தலைவர் நகைமுகன், பாரதீய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் முருகன் ஆகியோர் கூட்டாக திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :-
இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டுதலமான கோவில்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து முகாமாக பயன்படுத்துகிறது. இதில் இந்திய அரசு தலையிட்டு இந்து கோவில்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
இலங்கை தமிழர்களுக்காக ரூ.1ஷி கோடி மதிப்புள்ள நிவாரணப்பொருள் மற்றும் மருந்துகள் சேகரித்து உள்ளோம். அதை பழ.நெடுமாறன் தலைமையில் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கேட்டு ஒரு ஆண்டாக காத்து இருக்கிறோம். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த 2 பிரச்சினைகளுக்காக வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி ரெயில்வே ஜங்சன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இலங்கை பிரச்சினை தற்போது 8 கோடி தமிழர்கள் மத்தியில் மட்டும் இருந்தது. இதை 90 கோடி இந்துக்கள் மத்தியில் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல ஜெயேந்திரர் முன்னிலையில் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எச்சரிக்க வேண்டும்
மலேசியாவிலும் மதப்பிரச்சினை ஏற்படுகிறது. அங்கு மத மாற்றம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு விட்டன. அங்கும் தமிழர்களுக்கு தான் சிக்கல். ஆகவே இந்திய அரசு தலையிட்டு மலேசிய அரசை எச்சரிக்கை செய்ய வேண்டும். இலங்கை பிரச்சினையிலும் மத்திய அரசு தலையிட்டு தனி ஈழத்தை உருவாக்க வேண்டும். சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப்பீல்
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மதானி விடுதலையை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அப்பீல் செய்வோம். கர்நாடகத்தில் கழிவறை வாசலில் மகாகவி பாரதியார் படத்தை வைத்து அவமானப்படுத்தி உள்ளனர். வருகிற 15-ந்தேதிக்குள் பாரதியார் படம் கழற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் பொது கழிவறைகளில் கன்னட நடிகர் ராஜ்குமார் படத்தை வரைவோம்.
மதானியை சிறையில் அடைத்து வைத்ததற்கு வழக்கு தொடர வேண்டும் என்று நெடுமாறன் கூறிய கருத்தை எதிர்க்கிறோம். சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் ஹம்சா, தமிழ் ஈழ போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சி நடத்தி வருவதை கண்டிக்கிறோம்.
'சாமியார்' படம்
'சாமியார்' என்ற பெயரில் புதிதாக படம் தயாரிக்கப்படுகிறது. அதில் சங்கராச்சாரியார் வேடத்தில் சத்யராஜ், பங்காரு அடிகளார் வேடத்தில் விஷ்ணுசக்கரவர்த்தி, பிரேமானந்தா வேடத்தில் செந்தில் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இது போன்ற படம் எடுக்கக்கூடாது என்று தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தணிக்கு குழு மற்றும் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அதை மீறி படப்பிடிப்பு நடந்தால் அதை தடுத்து நிறுத்துவோம். இதில் நடிக்கும் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் வீடுகள் முன்பும் போராட்டம் நடத்துவோம்.
சாத்தான் குளம் பகுதியில் டாடா நிறுவனம் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க அரசு அனுமதி அளித்தது வரவேற்கத்தக்கது. இந்த தொழிற்சாலையை ஆதரித்து மக்களை திரட்ட இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment