கிட்னியை கேட்டு மிரட்டுகிறார்' மாஜி எம்.எல்.ஏ., மீது பெண் புகார்
சென்னை: "கூலிப்படை மூலம் என்னைக் கடத்திச் சென்று கிட்னியை எடுக்க மாஜி எம்.எல்.ஏ., முயற்சித்து வருகிறார். "கிட்னி தர மறுத்தால் பொய் வழக்கு' போடச் செய்வேன் என மிரட்டுகிறார். என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்' என்று பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் டி.ஜி.விஜயன். மாஜி தி.மு.க., எம்.எல்.ஏ.,வான இவர் நகராட்சித் தலைவராகவும் இருந்தவர். தற்போது நகராட்சி கவுன்சிலராக உள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர்.
"கிட்னி'யைத் தர நெருங்கிய உறவினர்கள் மறுத்துவிட்டதால், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் கூலித் தொழிலாளி நாகராஜின் மனைவி பத்மாவதியை, விஜயன் நாடியுள்ளார். ஆனால் அவரும் மறுத்து விட்டார். விஜயனும், அவரது குடும்பத்தினரும் பத்மாவதியை மிரட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பரிசோதனைகள் முடிந்துவிட்ட நிலையில், தானம் கொடுப்பதற்கான ஆவணங்களில் பத்மாவதி கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதனால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் விஜயன் குடும்பத்தினர் வெளியே பிடித்து தள்ளி கதவை பூட்டிச் சென்று விட்டனர். விஜயன் ஆட்கள் கடத்தி சென்று "கிட்னி'யை எடுக்க முயற்சித்து வருவதாக பத்மாவதி திருவொற்றியூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் பத்மாவதி கூறியிருப்பதாவது: விஜயன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக "கிட்னி' தருமாறு விஜயனும், அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்து வருகின்றனர். மறுத்தால் கஞ்சா வழக்கிலோ, விபசார வழக்கிலோ சிக்க வைத்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர். ஆளுங்கட்சி அதிகாரத்தின் மூலம் கூலிப்படையினரை வைத்து இரவோடு இரவாக கடத்தி "கிட்னி'யை எடுக்க முயற்சித்து வருகின்றனர். நான் தொடர்ந்து மறுத்து வருவதால் என்னையும், என் குடும்பத்தினரையும் நேற்று வீட்டிலிருந்து விரட்டி விட்டனர். என் குடும்பத்தை அழிக்க முயற்சிக்கும் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் உதவி கமிஷனர் முரளி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பரணிகுமார் விசாரணை நடத்தி வருகிறார். புகாரில் சிக்கிய விஜயனும் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், ""எனக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக பத்மாவதியிடம் "கிட்னி'யை தருமாறு கேட்டபோது ஒப்புக் கொண்டனர். முதலில் ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. இதற்கு ரூ.75 ஆயிரம் செலவாகியது. பத்மாவதியின் "கிட்னி' எனக்கு பொருந்தும் என டாக்டர்கள் கூறினர். ஆனால், பத்மாவதி தற்போது "கிட்னி'யைத் தர மறுக்கிறார். பணம் கேட்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
பணம் கொடுத்ததே குற்றம்: நெருங்கிய உறவினர்கள் தான் "கிட்னி' தானம் செய்யலாம் என்பதால், பத்மாவதியை, விஜயனின் நெருங்கிய உறவினர் போன்று ஆவணங்கள் தயாரித்து அவரிடம் கையெழுத்து வாங்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. "கிட்னி' பெறுவதற்காக ரூ.10 ஆயிரம் பணம் கொடுத்துள்ளது குற்றமாகவே கருதப்படும் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. ஏற்கனவே திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பு பெண்களிடம் நடந்த "கிட்னி' மோசடி சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினமலர்
--
No comments:
Post a Comment