Sunday, August 05, 2007

நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் அணுசக்தி ஒப்பந்தம்: பாஜக

நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் அணுசக்தி ஒப்பந்தம்: வெங்கைய நாயுடு

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

சென்னை, ஆக. 5: இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று பாஜக மூத்தத் தலைவர் எம். வெங்கைய நாயுடு கூறினார்.

வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்தப் பிரச்னையை எழுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியது:

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் நிறைய உள்ளன.

இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. மேலும், அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் நமக்கு அளிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை திரும்பக் கோரவும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் போன்றவற்றை திரும்பப் பெறவும் அமெரிக்க அதிபருக்கு இந்த ஒப்பந்தம் அதிகாரம் அளித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவுகள் இந்தியாவின் இறையாண்மையையும் நலன்களையும் பாதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்துக்கு அளித்த உறுதிகள் எதுவும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்த பிரச்னையை எழுப்பி இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க பாஜக போராடும்.

இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து போராடத் தயாராக இருக்கிறோம். இந்தப் பிரச்னை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் நடத்தப்படும்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரட்டை நிலை: ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஏகே.47 உள்ளிட்ட தானியங்கி துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இது காட்டுமிராண்டித்தனமானது. இதற்காக ஆந்திர அரசை கண்டிக்கிறோம்.

அதே நேரத்தில், மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் நிலத்தை கொடுக்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. டாடா நிறுவனத்துக்கு நிலத்தைக் கொடுக்க மறுத்தவர்கள் மீது கம்யூனிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஜோதிபாசு இதை நியாயப்படுத்தினார்.

அதே கம்யூனிஸ்டுகள் தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை வன்மையாகக் கண்டித்துள்ளனர். இது கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடத்துக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்தப் பிரச்னையையும் நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரிப்பதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர் எங்கள் கூட்டணியில் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள். எனவே அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து எங்கள் கட்சியின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா வாக்கு சேகரிப்பார்.

கர்நாடக மாநிலம்: கர்நாடக மாநிலத்தில் பாஜக -மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசில் குழப்பம் நிலவுவதாக பிரதமர் கூறுவது உண்மையல்ல. அக்டோபர் 3-ம் தேதி அங்கு பாஜக முதல்வர் பொறுப்பேற்பார். முதல்வர் மாற்றம் சுமூகமாக நடைபெறும்.

டைட்டானியம் ஆலை: சாத்தான்குளம் பகுதியில் டாடா நிறுவனம் டைட்டானியம் தொழிற்சாலையை அமைக்கும் விஷயத்தில் மாநில அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையில் விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும். மக்கள் கருத்தறிவதற்காக பாஜக குழு அப்பகுதிக்குச் செல்கிறது என்றார் வெங்கைய நாயுடு.

நன்றி தினமணி

No comments: