Saturday, August 11, 2007

தஸ்லிமா நஸ்ரீன் மீது தாக்குதல் பா.ஜ., மார்க்சிஸ்ட் கண்டனம்

புதுடில்லி: ஐதராபாத்தில் வங்க தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீது எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தாக்குதல் நடத்தியதற்கு பா.ஜ., மார்க்சிஸ்ட், ஆர்.எஸ்.எஸ்., ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் வி.கே.மல்கோத்ரா கூறுகையில், ""எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆந்திராவில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். குஜராத் இனக்கலவரம் தொடர்பாக குரல் எழுப்பிய மதச்சார்பற்ற கட்சியினர் தஸ்லிமா மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பது வேடிக்கையாக உள்ளது,'' என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில்,""தஸ்லிமாவை கொலை செய்வேன் என பகிரங்கமாக மிரட்டிய எம்.ஐ.எம்., கட்சியின் சட்டசபை தலைவர் அக்பரூதின் ஓவைசி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்,'' என்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பத்திரிகையான "பாஞ்சஜன்யா'வி ன் ஆசிரியர் தருண் விஜய் கூறுகையில்,""வங்க தேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு ஆதரவாக தஸ்லிமா நஸ்ரீன் குரல் கொடுத்து வந்தார். இதனால் தான் முஸ்லிம் பழமைவாதிகளின் கோபத்துக்கு அவர் ஆளானார். நாட்டில் பேச்சு சுதந்திரத்துக்கான உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் பிரச்னைகளை கிளப்பும் தலைவர்கள் இச்சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது கண்டனத்துக்குரியது,'' என்றார். மார்க்சிஸ்ட்: இப்பிரச்னை குறித்து மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தஸ்லிமா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிராக நடத்தப்பட்ட தாக்குதல். தஸ்லிமாவின் எழுத்து தொடர்பாக சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த முறையை கையாள்வது சரி அல்ல' என்று கூறப்பட்டுள்ளது.

No comments: