Sunday, August 05, 2007

மதானி விடுதலை; சில சந்தேகங்கள்

கம்பியில்லா சிறை'யில் மதானியின் 9 ஆண்டுகள்
கைதி அறையில் ஒரு நாள் கூட தங்கியதில்லை
நமது சிறப்பு நிருபர்

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், மதானி ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போதிலும், ஒரு நாள் கூட கைதிக்குரிய "செல்'லில் அடைக்கப்படவில்லை; வியாதியை காரணம் காட்டி சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றே காலத்தை கழித்தார். இவரது "கம்பியில்லா சிறை வாசத்தின்' பின்னணி குறித்த தகவல் கள், தற்போது வெளியாகியுள்ளன.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஒன்பது ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைபட்டிருந்தவர் மதானி; கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர். இவரை, வழக்கில் இருந்து விடுதலை செய்து தனிக்கோர்ட் ஆக.,1ல் தீர்ப்பளித்தது.


அன்றைய தினமே சிறையில் இருந்து வெளிவந்து கேரளாவுக்கு பறந்தார்.இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்கள் சிறை நிர்வாகத்துக்கு "போதாத' காலம்; அந்த அளவுக்கு சிறை அதிகாரிகள் அடுத்தடுத்து பிரச்னைகளை எதிர்கொண்டனர். மதானியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கேரளாவில் கிளம்பிய வதந்தி, கோவை நகரிலும் எதிரொலித்து வீண் பதட்டம் ஏற்பட்டது. மதானியின் விடுதலையால், சிறை நிர்வாகத்தின் நீண்ட கால "தலைவலி'க்கு நிவாரணம் கிடைத்துள்ளது. "கம்பியில்லா சிறை'யில் அடைபட்டிருந்த மதானி எவ்வாறு நடத்தப்பட்டார், பொழுதை எப்படி கழித்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறைவாசம் துவக்கம்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 1998, ஏப்.,16ல் மதானி கேரளாவில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்; அப்போது, இவரது உடல் எடை 110 கிலோ. ஏற்

கனவே, வலதுகால் துண்டிக்கப் பட்டுள்ள இவருக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை, முதுகுதண்டுவலி என ஏகப்பட்ட வியாதிகள். இதனால், வழக்கமாக விசாரணை கைதிகள் அடைக்கப்படும் "செல்'லில் இவரை அடைக்காமல், சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; இதற்கான, உத்தரவையும் மதானி கோர்ட்டில் பெற்றிருந்தார்.

இரு பிளாக் கொண்ட மருத்துவமனையில் 80 "பெட்'கள் உள்ளன. மதானி அங்கு சேர்ந்தபோது 25 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சையில் இருந்தனர். ஒரு "பெட்' மதானிக்கு ஒதுக்கப்பட்டு, சிறு அறை போல தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிறைக்குள் தமக்குரிய போதிய மருத்துவ வசதி இல்லை எனக்கூறிய மதானி, "கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்' என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட அரசு டாக்டர்கள் இவருக்கு சிகிச்சை அளித்தனர்.வலது காலுக்குரிய, செயற்கை கால் ரூ. மூன்று லட்சத்தில் சிறைக்குள் தயாரானது. ஆனால், மதானி ஏற்கவில்லை. உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு தனிக்கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என படிப்படியாக முயற்சித்தார்; அதுவும் பலிக்கவில்லை. மன ரீதியாக சோர்வடைந்த இவரது உடல் எடை 110 லிருந்து 50 கிலோவாக குறைந்தது. இவரது உடல்நிலை குறித்து கேரளாவில் அடிக்கடி வதந்தி பரவியதால், ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். பதறிப்போன மதானி, தமது பெயரால் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் "நான் நலமாக இருக்கிறேன்' என அறிக்கை வெளியிட்டார்; பிரச்னையும் ஓய்ந்தது.உணவில் மாற்றம்: பேரீச்சம்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்த மதானி, உடலில் சர்க்கரை அதிகரித்ததால், கைவிட்டார்; பழங்களை உட்கொண்டார். தினமும் இவருக்கு பருப்பு சாதம், கொண்டக்கடலை மற்றும் உப்புமாவும், வாரம் இரு முறை கோழிக்கறியும் வழங்கப்பட்டது. இரவு உணவுக்கு பின், சக கைதிகளுடன் நீண்ட நேரம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்த மதானி, இரவு 10 மற்றும் 11 மணிக்கு பிறகே துõங்க செல்வார்; மறுநாள் காலை 9.30 மணிக்கு பிறகு தான் எழுவார். தனக்குரிய காலை உணவை எடுத்துக்கொண்ட பின், அரசியல், சமூக பிரச்னைகள், தனது கடந்தகால அனுபவங்களை சக கைதிகளுடன் பகிர்ந்து கொள்வார்; குர்ஆன் படிப்பார். கைதிகளில் அஷ்ரப், சுபேர் உள்ளிட்ட மூவர், இவருக்கு தேவையான உதவியை செய்தனர்.தேறியது உடல்நிலை: தனது உடல்நிலை மோசமாகி வருவதை உணர்ந்த மதானி, கோர்ட்டில் உத்தரவு பெற்று கோவையில் உள்ள ஆயுர்வேத மைய டாக்டர்களை சிறைக்குள் வரவழைத்து சிகிச்சை பெற்றார்; உழிச்சல், பிழிச்சல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வாரம் ஒரு முறை பரிசோதித்து மருந்து, மாத்திரை கொடுத்தனர்; உடல்நிலை வெகுவாக தேறியது.கைதிகள் பிரியாவிடை: குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு கூறப்பட்டதும், புது தெம்புடன் சிறைக்கு திரும்பிய மதானி, சக கைதிகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்; கைதிகள் பிரியாவிடை அளித்தனர். ஒன்பது ஆண்டுகளாக தமக்குரிய வசதிகளை செய்து கொடுத்த சிறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், "டாடா' காட்டிவிட்டு கேரளாவுக்கு பறந்தார்.

பிரஸ் கிளப்பில் வைக்கப்பட்ட "டைம்பாம்':மதானியை சந்திக்க அவரது மனைவி சூபியா, 2002ல் கோவை மத்திய சிறைக்கு வந்திருந்தார். நுழைவாயிலில் இருந்த போலீசார், அவரை சோதனையிட்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். போலீசுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சூபியா மற்றும் உடன் வந்த நவுசாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். அடுத்த சில நாட்களில், கோவை பிரஸ் கிளப்பில் சக்தி வாய்ந்த "டைம்பாம்' வைக்கப்பட்டது. வெடிக்கும் முன் கைப்பற்றிய நகர போலீசார் அதை செயலிழக்கச் செய்தனர். இந்த சதித்திட்டம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவாக உள்ள கண்ணனுõர் சபீர் உள்ளிட்டோரை போலீசார் தேடுகின்றனர். இதில், மதானி கட்சியினருக்கு தொடர்பு உண்டா, என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனரே தவிர, விடை காணவில்லை.

வழக்கு மேல் வழக்கு அனைத்திலும் "எஸ்கேப்':"கோர்ட்டில் இருந்து தம்மை சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் எஸ்.ஐ., ஜேக்கப் என்பவரை மதானி தாக்கினார்; அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தார்' என, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் மதானிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அளித்து ஜே.எம்; 3 கோர்ட் தீர்ப்பளித்தது; மேல் முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப்பட்டது.சிறை மருத்துவமனையில் இருந்த மதானி, தமது அறையை சோதனையிட வந்த வார்டர்கள் இருவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறைவிதிமுறைகளின்படி வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.வேறு ஒரு சந்தர்ப்பத்தில், சிறை வார்டரை மதானி தாக்கியதாக ஜே.எம்;3 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது; போதிய ஆதாரம் இல்லாமல், இவ்வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மதானி விடுதலை; சில சந்தேகங்கள்...:நாட்டையே உலுக்கிய சம்பவம் கோவையில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்தது. 19 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. கோவையே மயான பூமியா காட்சி அளித்தது. 58 எட்டு பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.இச்சம்பவத்துக்கு காரணமான அல்உம்மா இயக்கத்தின் நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் முகமது அன்சாரி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தாஜூதீன் உட்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு குற்றப்பத்திரிகையில் 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் அப்துல் நாசர் மதானி. இவர் கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்.இவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது சில போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. கோவை தொடர் வெடிகுண்டுச் சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.சென்னை கோடம்பாக்கம் மசூதி தெருவில் சந்தேகப்படும் நபர்கள் இருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில், விசாரணை நடத்தப்பட்டது. அங்கு மூன்று பேர் பிடிபட்டனர். அவர்களை சென்னை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் எந்தத் தகவலும் சொல்லவில்லை.அவர்களின் மன உறுதியை கண்டதும், அப்போதைய போலீஸ் கமிஷனர் காளிமுத்து சில முக்கியமான அதிகாரிகளை அழைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.அதன் பேரில், விசாரணை நடந்தது. அப்போது தாஜூதீன் என்பவர் தான் சில உண்மைகளை தெரிவித்தார். அவர் கொடுத்தத் தகவலின் பேரில் அமைந்தகரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ வெடிமருந்துப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. கோடம்பாக்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்த வெடிமருந்துகளும் சிக்கின.வடசென்னையிலிருந்த அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அந்த வங்கிக் கிளைக்கு கேரளாவிலிருந்து பணம் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதை வைத்து விசாரணை நடந்த போது தான், அப்துல் நாசர் மதானி என்பவரின் ரூபம் வெளிப்பட்டது. கேரளாவில் உள்ள நபர் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. அப்போதைய எஸ்.பி., தாமரைக்கண்ணன் விசாரணையை தொடங்கினார். அல்உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் மதானி போனில் பேசிய விவரங்கள் எடுக்கப்பட்டன. கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு வெடிமருந்துகளை பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைத்துக் கொடுத்தது மதானியின் ஆட்கள் தான். மதானியின் ஆதரவாளரான ஆர்மிராஜூ என்பவர் தான் வெடிமருந்துகளை கோவைக்கு கடத்தி வந்தவர்.இது தவிர, கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு கேரளாவிலிருந்து பண உதவியும் செய்யப்பட்டிருந்ததை எல்லாம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கண்டுபிடித்தனர்.மதானி மீது ஐந்து வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஐந்து வழக்குகளிலிருந்தும் மதானி விடுவிக்கப்பட்டு விட்டார். அந்த வழக்குகளில் உண்மைகளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நிரூபிக்க தவறி விட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது.


நன்றி தினமலர்

No comments: