பாரிசில் செப்டம்பர் 2ம் தேதி மாணிக்க விநாயகர் தேர் பவனி
பாரிஸ்: பாரிஸ் நகரில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோயிலின் 12வது தேர்த் திருவிழா செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது.
பாரிசில் கடந்த 22 ஆண்டாக இருந்து வரும் இந்த கோயிலில் ஆகம முறைப்படி 3 கால பூஜைகளும் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, பிரதோஷம், ஏகாதசி, பவுர்ணமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
தைப் பொங்கல், தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரைப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, ஆனி உத்தரம், ஆடி அமாவாசை, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி, ஐப்பசி வெள்ளி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை ஆகிய விசேஷ நாட்கள் இந்த கோயிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீ மாணிக்க விநாயகரின் 12வது தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பஞ்சமுக விநாயகர் மற்றும் முருகப்பெருமானின் தேர் பவனி, நாதஸ்வரம் முழங்க, காவடி, பஜனை ஆகியவற்றுடன் நடைபெறும். 3ம் தேதி காலை 8 மணிக்கு தீர்த்ம், சங்காபிஷேகம், திருவூஞ்சல் நடைபெறும்.
இதைஒட்டி பால்காவடி, தீர்த்தக்காவடி, புஷ்பக்காவடி, கற்பூச்சட்டி மற்றும் சாதாரண காவடிகள் எடுக்க விரும்புவோர் முன்கூட்டியே ஆலய நிர்வாகத்திற்கு தகவல் தரவேண்டும். பூஜை, அபிஷேகத்திற்கு வேண்டிய பூ, பால், தயிர், இளநீர் கொடுக்க விரும்புவோர் அவற்றை கோயிலில் ஒப்படைக்க வேண்டும்.
No comments:
Post a Comment