Friday, March 14, 2008

மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால் கிராமங்கள் காலி - வீட்டுக்கு ஒருவரை கேட்டதால் மக்கள் ஓட்டம்

மாவோ பயங்கரவாதிகளால் கிராமங்கள் காலி - வீட்டுக்கு ஒருவரை கேட்டதால் மக்கள் ஓட்டம்

போபால்: "வீட்டுக்கு ஒருவரை எங்கள் படையில் சேர்க்க வேண்டும்; இல்லாவிட்டால், உயிரோடு இருக்க முடியாது' என்று மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் மிரட்டியதை அடுத்து, மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஏழு கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி விட்டனர்.

ம.பி., சட்டீஸ்கர் மாநிலங்களில், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகம்; எல்லையோர மாவட்டங்களில் உள்ள மலையின கிராமங்களை வளைத்துள்ளனர். அங்கு பாதுகாப்புப்படையினரும் போக முடியாத அளவுக்கு கண்ணி வெடிகளை புதைத்துள்ளனர்; பயங்கரவாத படையினர் கண்காணித்தும் வருகின்றனர். சட்டீஸ்கர் ம.பி.,மாநில எல்லையில் உள்ள சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை மாவோ பயங்கரவாதிகள் தங்கள் வசம் வைத்துள்ளனர். "வீட்டுக்கு ஒரு இளைஞரை எங்களுக்கு தாருங்கள்; இல்லாவிட்டால், கிராமத்தில் உயிரோடு வாழ முடியாது' என்று மிரட்டியதை அடுத்து, அங்குள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி விட்டனர்.

இதையடுத்து, எல்லையை தாண்டி, ம.பி.,யில் உள்ள ஏழு கிராமங்களில் உள்ள மலையின மக்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இதனால், பீதியடைந்த கிராம மக்கள் ஆயிரத்து 200 பேர், கிராமங்களை விட்டு வெளியேறி விட்டனர். இவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமங்களை சுற்றி வளைத்த பயங்கரவாதிகள், பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். இரு மாநில எல்லையிலும் இப்போது கடும் கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மாவோ பயங்கரவாதிகள் நடமாட்டத்தை ஒடுக்கி, மீண்டும் கிராமங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பாதுகாப்புப்படையினரால், இதுவரை கிராமங்களில் நுழையவே முடியவில்லை.

No comments: