சிமி அமைப்பின் முக்கிய தலைவர்கள் கூண்டோடு கைது
வியாழக்கிழமை, மார்ச் 27, 2008
இந்தூர்: தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தலைவர் சப்தர் நகோரி உள்ளிட்ட 10 முக்கிய தலைவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கைது செய்யப்பட்டனர்.
மும்பை, ஹைதராபாத், கோரக்பூர், மாலகான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு சிமிதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிமி அமைப்பின் பல்வேறு முக்கிய புள்ளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த சிமி அமைப்பின் தலைவர் சப்தர் நகோரி இந்தூரில் பிடிபட்டார். அங்குள்ள ஒரு ரகசிய இடத்தில் நகோரி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக வந்த தகவலின் பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு விரைந்தனர்.
அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீஸார், நகோரி உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனர்.
இவர்களில், சிமி அமைப்பின் தென் பிராந்திய தலைவன் குபிலியும் அடக்கம். இதேபோல மகாராஷ்டிர மாநில பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் ஆவார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
எதிர்கால நடவடிக்கை குறித்து அவர்கள் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது கூண்டோடு பிடிபட்டனர்.
சிமி அமைப்பின் தலைவர் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் சிக்கியுள்ளதால், பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என போலீஸார் நம்புகின்றனர்.
நகோரி கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தலைமறைவாக இருந்து வந்தார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் இவருக்கு நெருக்கமான தொடர்புகள் உள்ளன. அங்கு ஆயுதப் பயிற்சியும் பெற்றவர் என்று கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிமி அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment