நன்றி தட்ஸ்டமில்.
கிருஷ்ணகிரி அருகே தண்டவாளத்தில் டெட்டனேட்டர் வெடிப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2008
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ரயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் வெடித்தன. ரயிலைக் கவிழ்க்க நடந்த முயற்சியா இது என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே கிரிகேபள்ளி என்ற இடத்தில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. நேற்று இந்த வழியாக பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வந்தது. ரயில், கிரிகேபள்ளி ரயில்வே கேட்டை தாண்டிச் சென்றதும், தண்டவாளத்தில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கேட் கீப்பர் அங்கு சென்று பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் நீண்ட வயர்களுடன் 10 டெட்டனேட்டர்கள் ஒரு கம்பியால் கட்டப்பட்டு வெடித்த நிலையில் கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டார்.
பத்து டெட்டனேட்டர்களில் 3 மட்டுமே வெடித்திருந்தது. தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. தேன்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இந்த டெட்டனேட்டர்கள் எப்படி இங்கு வந்தன. யார் இதைப் போட்டது என்று தெரியவில்லை. இது பாட்னா ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளது என்பதால் இது நக்சலைட்டுகள் வேலையாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
டெட்டனேட்டர்களைக் கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரயில் வரும்போது இந்த டெட்டனேட்டர்கள் அனைத்தும் வெடித்திருந்தால் பெரும் நாசம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment