ஆதிதிராவிடர்களில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை : ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கும் போது இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர், இந்து பகடை, இந்து மாதாரி என்ற நான்கு ஜாதிகளுக்கும்...
ஒரே ஒதுக்கீடாக அரசாணை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி பேசினார். உள் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். ஆதிதிராவிடர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது : இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில், தமிழகத்தில் மொத்தம் 36 ஜாதியினர் பழங்குடியினர் என்றும்,76 ஜாதியினர் ஆதிதிராவிடர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் மொத்த மக்கள் தொகை ஆறு கோடியே 24 லட்சத்து 6 ஆயிரம். இதில், ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம். தமிழகத்தில் வாழும் ஆதிதிராவிடர் இன மக்களில் 76 பிரிவினர் உள்ளனர். அவற்றில் அருந்ததியர் ஒரு பிரிவினர்.
ஆதிதிராவிடர்களில் அருந்ததியினர் தமக்கு உள் இட ஒதுக்கீடு கோரி வருகின்றனர். 76 பிரிவினர்களாக உள்ள ஆதிதிராவிட இனத்தவரில், ஆதிதிராவிடர், பள்ளர், பறையர், சக்கிலியர் மற்றும் அருந்ததியர் ஆகிய ஐந்து பிரிவினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த ஐந்து பிரிவினர் மொத்த ஆதிதிராவிட மக்கள் தொகையில் 93.5 சதவீதம். 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அருந்ததியர் மக்கள் தொகை 7 லட்சத்து 71 ஆயிரத்து 659. சக்கிலிய மக்கள் தொகை 7 லட்சத்து 77 ஆயிரத்து 139. இரு பிரிவுகளையும் சேர்த்தால் 15 லட்சத்து 48 ஆயிரத்து 798 பேர் உள்ளனர். இந்த இரு பிரிவினரும் ஆதிதிராவிடர் மக்கள் தொகையில் 13.06 சதவீதம்.
மொத்த ஆதிதிராவிட மக்கள் தொகையான ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு 18 சதவீதம் எனும் போது, அவர்களில் 13.06 சதவீதமாக 15 லட்சத்து 48 ஆயிரம் பேரைக் கொண்ட அருந்ததியர் மற்றும் சக்கிலியருக்கு 2.35 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டி வரலாம்.
அவர்கள் தமது கோரிக்கையில், உள் ஒதுக்கீட்டில், இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர், இந்து மாதாரி, இந்து பகடை என நான்கு உட்பிரிவுகள் உள்ளதாகவும், இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக திருமணம் மற்றும் இதர, சமூகச் சடங்குகளை வேறுபாடின்றி நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கும் போது இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர், இந்து பகடை, இந்து மாதாரி என்ற நான்கு ஜாதிகளுக்கும் ஒரே அரசாணையாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்த கோரிக்கை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அந்த கருத்துக்களின் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுக்கும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதியும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஆதிதிராவிடர்களுக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், அருந்ததியினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து இடையில் வெளிநடப்பு செய்தார்.
2 comments:
நல்ல விஷயத்துக்கு பாராட்டு எப்போதுமே உண்டு என்பதை நிரூபிக்கும் உங்களுக்கு பாராட்டுகள்
தலித்துகளிலும் தலித்துகளாக இருக்கும் அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதை எதிர்க்கும் கிருஷ்ணசாமியை கண்டிக்க வேண்டும்
Post a Comment