Saturday, March 01, 2008
மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸுக்கு அஞ்சலி
--
ஸ்டெல்லா புரூஸின் வார்த்தைகளில்
--
நன்றி அம்பலம்.காம்
எங்கள் காதல்
காதலுடன் நினைத்துப் பார்க்கிறேன்!
காதலை ஆன்மிக வேள்வியால் மடை மாற்றியவர் ஸ்ரீ.ஆண்டாள்... காதல் ஸ்தூலம் சார்ந்ததில்லை என்பதற்கு ஆண்டாள் நாச்சியாரின் கதையே சான்று. காதல் என்ற மகா உண்மையை உயிரோட்டமாகக் கொண்டிருப்பதாலேயே திருப்பாவையும்; நாச்சியாரின் திருமொழியும் சாகாவரம் பெற்றிருக்கின்றன
காதல் கதைகள் எழுதுவதில் கெட்டிக்காரரான எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தான் எழுதிய 'அது ஒரு நிலாக் காலம்' நாவல் அனுபவத்தைச் சொல்கிறார்.
என்னுடைய 'அது ஒரு நிலாக்காலம்' நாவலில் விவரித்துச் சொல்லப்பட்டிருந்த சம்பவங்கள், முப்பது வருடங்களுக்கு முன்பு வாழ்க்கையில் எனக்கு நடந்து முடிந்துவிட்ட சில அனுபவங்களின் தொகுப்புத்தான். அன்றைய காலகட்டத்தில்; அந்த அனுபவங்களையெல்லாம் நினைபடுத்திப் பார்த்துக் கொண்ட தொடக்கத்தில் அவையெல்லாம் ரம்மியம் மிக்க நிலாக்காலமாய் மனதிற்கு தோன்றியிருந்தாலும் கூட; இன்று அந்த காலகட்டங்களில் இருந்து முழுவதுமாக விலகி; வெகுதூரம் இடம் பெயர்ந்து வந்துவிட்ட பின்; மேலும் மேலும் பற்பல அனுபவங்களும் விரிந்து பரந்த சிந்தனைகளும் இணைந்து கொண்ட பின் எனக்கு மொத்த வாழ்க்கை என்பதே ஈடு இணையற்ற நிலாக்கால விகசிப்பாகத்தான் ஒளிர்ந்து மிளிர்கின்றது.
நிலாக்கால அழகு என்பது நிஜமாகவே சொற்களின் வர்ணனைகளுக்கும்; எண்ணத்தின் விவரிப்புகளுக்கும் அப்பாற்பட்டது. மந்தகாசமான அந்த எழிலையும் வார்த்தைகளாலும் வர்ணனைகளாலும் அப்படியே என் எண்ணத்தால் பிரதிபலித்துக் காட்டிவிட்ட ஒரே காரணத்தால்தான் 'அது ஒரு நிலாக்காலம்' நாவல் இத்தனை வருடங்கள் சென்ற பின்பும் வாசித்தவர்களின் மனங்களில் இன்றும் அழிய முடியாத அழுத்தமான இடத்தைப்
பெற்றிருக்கிறது. இதன் பொருள்-பொய் அற்ற நிஜமான தொனியில்; நிஜத்தை நிஜமாக மட்டும் சொல்லப்படுகிற
எந்த ஒரு சிறிய; அல்லது பெரிய நிறமும் அழிய வொண்ணாத அமரத்துவத்தைப் பெற்று விடும் என்பதுதான். எத்தனையோ தேசங்களில்; எத்தனையோ மொழிகளில் நிஜத்தை இம்மியளவும் நீர்த்துப் போகாமல் பதிவு பண்ணிக் காட்டப்பட்டிருக்கும் பற்பல காதல் அனுபவங்கள் எல்லாமே அமர காவியமாய் நிலைபெற்றிருப்பது இந்த அடிப்படையில்தான்.
என்னுடைய பதினைந்தாவது வயதில் நான் படிக்க நேர்ந்த ஆங்கில எழுத்தாளன் சார்லஸ் டிக்கன்ஸின் காதல் அனுபவங்களும்; காதல் இம்சைகளும் என்னுடைய இந்த அறுபதாவது வயதிலும் மறக்க முடியாத படிமங்களாய் இருக்கின்றன. வறுமைக் கோட்டுக்கும் கீழ்பட்ட இளமைப் பிராயத்தில் காதல் வயப்பட்ட பெண்ணின் நட்பைப் பெற முடியாத சார்லஸ் டிக்கன்ஸ்; மிகப்பெரும் எழுத்தாளனாக புகழும் பொருளும் பெற்றுவிட்ட பிற்காலத்தில் - இளமையில் தனக்கு கிடைக்காமல் போன அதே பெண்ணை நோக்கி; தணிந்து போகாத அதே காதல் தாகத்துடன் ஓடிய அந்த காதல் ஓட்டத்தில் மானசீகமாக நானும் கலந்து கொண்டேன். அந்த மானசீக ஓட்டம் குறிப்பிட்ட பெண் ஒருத்தியை நோக்கிய ஓட்டமாக இல்லாமல்; காதல் என்ற மகா உண்மையை நோக்கிய
ஓட்டமாகவும் என்னுள் ஓர் பிரவாகம் புறப்பட்டது.
அந்தப் பிரவாக ஓட்டத்தில் நான் சந்தித்த; மூழ்கி எழுந்த காதல் «க்ஷத்திரங்கள் எண்ணற்றவை. நேசித்த காதல் அர்த்த நாரீச்வர ஜீவன்கள் பற்பல. மேற்கத்திய சாஸ்திரிய சங்கீத மேதை பித்தோவனையும் அவனின் காதல் மங்கை ஆஸ்திரிய ராஜவம்ச தெரலேயையும் பற்றி எத்தனையோ இரவுகள் தூங்காமல் வாசித்துக் கொண்டிருந்தேன். இசை விற்பன்னன் ஷைக்காவ்ஸ்கி - டெஸிரி காதல் இம்சைகளையும் சோகங்களையும் இரவு பகல் பாராமல் வாசித்துக் கொண்டிருந்தேன்.
இந்த வரிசையில் நூற்றுக்கணக்கான ஜீவன்களைப் பற்றி குறிப்பிட்டுக் கொண்டே போகலாம். அம்பிகாபதி அமராவதி இல்லையா... லைலா மஜ்னு இல்லையா... ரோமியோ ஜூலியட் இல்லையா... எல்லாவற்றுக்கும் மேலாக மாதுஸ்ரீ. ஆண்டாள் இல்லையா? காதலை ஆன்மிக வேள்வியால் மடை மாற்றியவர் ஸ்ரீ.ஆண்டாள்... காதல் ஸ்தூலம் சார்ந்ததில்லை என்பதற்கு ஆண்டாள் நாச்சியாரின் கதையே சான்று. காதல் என்ற மகா உண்மையை உயிரோட்டமாகக் கொண்டிருப்பதாலேயே திருப்பாவையும்; நாச்சியாரின் திருமொழியும் சாகாவரம்
பெற்றிருக்கின்றன.
நிலாக்காலம் காதல் கதையை எழுதியப் பிறகு எதிர்பாராத மற்றொரு பின்விளைவு என்னவென்றால் காதல் அனுபவத்தைச் சொல்லவந்த நவீனமே பல திசைகளில் இருந்தும் என்னை நோக்கிய காதல் தாக்கங்களை ஊற்றாய் பீறிட வைத்து விட்டன. அந்தக் காதல் தாக்கங்கள் என்னை குதூகலப்படுத்தவில்லை. அந்த ஊற்றுப் பெருக்குகள் என்னை உற்சாகப்படுத்தவில்லை. மாறாக அவை என்னை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டன. கடும் மன இம்சையில் ஆழ்த்தி விட்டன. பெண்களின் காதல் வெளியீடுகள் - நிஜமான அன்பிற்கும்; அந்த அன்பின் அடிப்படையில் அமையும் நிஜ உறவின் உறுதுணைக்கும் ஏங்குகிற ஏக்கத்தின் பெருமூச்சுகளாகத்தான் எனக்குத் தெரிந்தன. பலராலும் உணரப்படாமல் பல பெண்களின் அடிமனங்களில் இத்தகைய ஏக்கப் பெருமூச்சுகள் புகைந்து கிடக்கின்றன. இந்தப் புகைச்சல்கள் மகிழ்ச்சியை நசித்து விடுகின்றன. நீண்ட புகைச்சல்கள் முரண்பாடுகளை ஏற்படுத்தி ஆண் - பெண் உறவை சேதப்படுத்தி விடுகின்றன. இதன் சேதாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் இன்றைய நமது வாழ்க்கை அமைப்பில் மிகப் பெரும் விசனம் இதுதான். இந்த விசனம் முடிவுக்கு வர வேண்டும். இதற்கான ஒரே திறவுகோல்-TRUE LOVE.
-ஸ்டெல்லா புரூஸ்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எழுத்தாளர் என்றாலே கருப்புக் கண்ணாடி போட்டுக் கொள்வது ஏன் ?
Post a Comment