மலேசியா: இந்து கணவருடன் குடும்பம் நடத்த
முஸ்லீம் பெண்ணுக்கு தடை
ஆகஸ்ட் 11, 2007
கோலாலம்பூர்: இந்து சமூகத்தைச் சேர்ந்த நபரை கல்யாணம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முஸ்லீம் பெண் ஒரு வழியாக சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.
இருப்பினும் அவரது கல்யாணம் செல்லாது, கணவருடன் அவர் சேர்ந்து வாழக் கூடாது என மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் இஸ்லாமியர்கள், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்ய முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.
இந் நிலையில், இந்தியாவைப் பூர்விமாகக் கொண்ட நஜீரா பர்வீன்லி முகம்மது ஜலாலி என்பவர், மலேசியாவைச் சேர்ந்த மகேந்திரன் சபாபதி (25) என்ற இந்து வாலிபரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது வீட்டை கடந்த ஏப்ரல் மாதம் மலேசிய போலீஸார் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். இந்து வாலிபருடன் சட்டவிரோதமாக சேர்ந்து வாழ்வதாக கூறி நஜீரா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த நான்கு மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தார் நஜீரா. இவருக்காக கர்பால் சிங் என்ற வக்கீல், செலாங்கூர் மாநில நீதிமன்றத்தில் வாதாடினார்.
வழக்கின் இறுதியில், இவர்களது திருமணம் செல்லாது, நஜீரா, மகேந்திரனுடன் சேர்ந்து வாழக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு, நஜீராவை விடுதலை செய்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பு மலேசியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாலிக் இம்தியாஸ் சர்வார் என்பவர் கூறுகையில், இப்படி உத்தரவிட சட்டத்தில் இடம் உள்ளதா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட தீர்ப்பு எப்படி பிறப்பிக்கப்பட்டது என்று எனக்குப் புரியவில்லை.
நான் ஒரு முஸ்லீம் இல்லை என்று நஜீரா கோர்ட்டில் கூறியுள்ளார். அப்படி இருக்கையில் எப்படி முஸ்லீம் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரியவில்லை என்றார் அவர்.
நஜீரா தனது பெற்றோருடன்தான் சேர்ந்து வசிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிய 29 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்து சித்திரவதை செய்த சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை ஆறு மாதங்கள் போலீஸார் சித்திரவதை செய்ததாக அவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.
இந்த நிலையில் இந்து வாலிபரைக் கல்யாணம் செய்து கொண்ட பெண்ணை குடும்பம் நடத்தக் கூடாது என்று கூறி மலேசிய நீதிமன்றம் பிரித்து வைத்துள்ளது.
No comments:
Post a Comment