Thursday, August 02, 2007

மதானி விடுவிப்பு: கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன் மகிழ்ச்சி



திருவனந்தபுரம்: கோவை தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக கோவை சிறையில் இருந்த அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார்.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்த,கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி நேற்று விடுவிக்கப்பட்டார்.


இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மதானி விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ""ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியுடன் மதானி சேர்க்கப்படுவது குறித்து தற்போது கூற முடியாது. கேரளாவில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் சாதாரணமானவை,'' என்று கூறினார்.

மதானி கேரளாவிற்கு செல்லும் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். பா.ஜ., பொதுச் செயலர் ரமேஷ் கூறுகையில், ""அரசு தரப்பு வக்கீல் சுமத்திய குற்றச்சாட்டுகளை, சரியாக நிரூபிக்க தமிழக போலீசார் தவறி விட்டனர்,'' என்று கூறினார். கோவை குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து மதானி விடுவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, கேரள மக்கள் ஜனநாயக கட்சியினர் பல்வேறு இடங்களில் பேரணிகளை நடத்தினர். பல இடங்களில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

1 comment:

வஜ்ரா said...

2001ல் CPIMக்கு இஸ்லாமியத் தீவிரவாதி மதானி, இப்போது அதே கம்யூனிஸ்டுகளுக்கு செகுலர் செம்மல் மதானியாகிவிட்டார். எப்படி இது சாத்தியம் ?


வோட்டு பொறுக்கி அரசியலில் கம்யூனிஸ்டுகள் விளையாடுவதைத்தான் இது காட்டுகிறது.