Tuesday, August 12, 2008

தஞ்சாவூரில் சிவாஜிகணேசன் முழுஉருவ வெண்கல சிலை

தஞ்சாவூரில் சிவாஜிகணேசன் முழுஉருவ வெண்கல சிலை
15-ந் தேதி நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் திறந்து வைக்கிறார்



சென்னை, ஆக.12-

தஞ்சாவூரில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முழுஉருவ வெண்கல சிலையை நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் திறந்துவைக்கிறார்.

இது குறித்து நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், சிவாஜிகணேசன் சிலை அமைப்பு குழுவை சேர்ந்தவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சிவாஜி கணேசன் சிலை

தஞ்சை மக்களின் நீண்டநாள் ஆசையை பூர்த்திசெய்யும் வகையில் நடிகர் சிவாஜிகணேசன் பிறந்த தஞ்சை மண்ணில் அவரது முழு உருவ வெண்கல சிலையை திறக்க இருக்கிறோம். நடிகர் சிவாஜிகணேசன் சிறந்த தேசியவாதியாக திகழ்ந்ததால் சுதந்திர தின நாளான ஆகஸ்டு 15-ந் தேதி மாலை 6 மணிக்கு அவரது சிலையை திறக்க முடிவு செய்திருக்கிறோம். சிலையை திறப்பதற்கு தமிழக அரசும், தஞ்சை நகராட்சியும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த சிலை தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் மணி மண்டபம் அருகே அமைந்துள்ளது. சிலை திறப்பு விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் தலைமை தாங்குகிறார். ராம்குமார், நடிகர் பிரபு, எல்.கணேசன் எம்.பி, திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

நடிகர் திலகம் முழு உருவ வெண்கல சிலையை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் திறந்துவைக்கிறார். மதுரை ஆதினம், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ராஜேஷ், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் மனோஜ்குமார், கிருஷ்ணசாமி வாண்டையார், சீனிசாமி தேவர், பாலபிரஜாபதி அடிகளார், மறுமலர்ச்சி மக்கள் தமிழக தலைவர் துரை அரசன், ராஜா பாபா போன்ஸ்லே, அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன், தஞ்சை மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் கே.எம்.நேரு உள்பட பலர் பேசுகிறார்கள்.

72 கிராம தலைவர்கள்

சென்னை கடற்கரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் 6 அடிக்கு மேல் உயரத்தில் சிவாஜி கணேசன் சிலை அமைக்கப்பட்டுள்ளது போல தஞ்சையிலும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. தஞ்சையை சேர்ந்த சுமார் 72 கிராமங்களை சேர்ந்த தலைவர்கள் அடங்கிய குழுவினர்தான் இந்த சிலையை நிறுவி உள்ளனர். தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக சிவாஜி கணேசன் சிலையை நாகர்கோவில், மதுரை, குமாரபாளையம் ஆகிய இடங்களில் திறக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கருணாநிதி

சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவுக்கு ஏன் முதல்-அமைச்சர் கருணாநிதியை அழைக்கவில்லை என்று கேட்ட கேள்விக்கு ராம்குமார் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினநாள். அன்று யார் கிடைக்கிறார்களோ அவர்களை வைத்து சிவாஜி கணேசன் சிலையை திறக்கலாம் என்று முடிவுசெய்தோம். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஆகஸ்டு 15-ந் தேதி நிகழ்ச்சி உள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதியை நேற்று சந்தித்தோம். அக்டோபர் மாதம் 1-ந் தேதி சிவாஜி கணேசன் 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொள்ள சம்மதித்துள்ளார்.

இவ்வாறு ராம்குமார் கூறினார்.

No comments: