Friday, March 07, 2008

ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் - அர்ஜுன்சம்பத் அறிக்கை

ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால்

அறிக்கை
அர்ஜுன்சம்பத், தலைவர், இந்துமக்கள் கட்சி


சைவத்தின் தலைநகரம் என்று போற்றப்படும் சிதம்பரத்தில் தமிழுக்கும், சைவத்துக்கும் ஒரு மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கும் சதித் திட்டம் திட்டமிட்ட ரீதியில் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் சிதம்பரம் கோயிலில் நடைபெற்ற தேவாரம் சர்ச்சையின் நோக்கம், ஆன்மிகமாக இல்லாமல் நாத்திகவாதிகளின் கீழ்த்தரமான சதியாக இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

சிதம்பரம் திருக்கோயில் மனித உடலையொத்த வடிவமைப்பு உடையது. முதுகுத் தண்டு கொடி மரமாகவும், கோபுரம் இறைவனின் திருப்பாதமாகவும், சிற்சபை (நடராஜப் பெருமான் திருநடனம் ஆடுகின்ற பகுதி) இதயப் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடராஜர் தத்துவம் அணு தத்துவங்களோடு பொருந்திப் போகிறது. சிவதாண்டவம் என்னும் நடராஜரின் நடன அசைவு உலக இயக்கமாகக் கருதப்படுகிறது.

இந்தத் தில்லை வனத்தில் யோக சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற பதஞ்சலி முனிவருக்கும், ஆன்மிகத்தில் பெரும் நிபுணத்துவம் பெற்ற வியாக்ரபாதருக்கும் (புலிக் கால் முனிவர்) இறைவன் தனது திருநடனக் காட்சியை அருளியிருக்கிறான் என்கிறது தலபுராணம்.

சந்தானக் குரவர்கள் நால்வரும் சமய உண்மைகளையும், ஆன்மிக வழிமுறைகளையும் இங்கே வடிவமைத்து வைத்துள்ளனர். மூவர் பாடிய தேவாரம் இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. மாமன்னன் ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பிகள் துணையோடு தில்லைவாழ் அந்தணர்களின் சம்மதத்தோடு தேவார பதிக ஓலைகளை மீட்டெடுத்து தமிழ்கூரும் நல்லுலகம் எங்கும் பரவச் செய்தான்.

சைவ சமய குரவர்கள் நால்வருக்கும், தில்லைவாழ் அந்தணர்களுக்கும் எப்போதும் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. தில்லைவாழ் அந்தணர்கள் சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படுபவர்கள். எனவேதான் சுந்தரமூர்த்தி நாயனார் "திருத் தொண்டர் தொகை' பாடுகிறபோது தொண்டர்தம் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இறைவனே "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என அடியெடுத்துக் கொடுக்கிறார்.

தில்லைவாழ் அந்தணர்கள் சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டு புரிந்தவர்கள். ஆதிசைவ அந்தணர் மரபில் தோன்றிய இவர்கள் சுத்த தமிழர்கள் ஆவார்கள். சந்தானக் குரவர் நால்வரில் கொடிக் கவி பாடி சிதம்பரத்தில் கொடியேற்றிய உமாபதி சிவம் தில்லைவாழ் அந்தணர் குடும்பத்தைச் சார்ந்தவர்.

பொதுவாக அந்தணர்கள் (பிராமணர்கள்) வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடாகும். இந்தியத் திருநாட்டின் ஆன்மா சமயத்தில் உள்ளது. சமயத்தைப் பேணுபவர்கள் அந்தணர்கள். ஆகவே அந்தணர்களை சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்திவிட்டால் இந்தியாவை எளிதாக அடிமைப்படுத்தி விடலாம் என்கிற காரணத்தால் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை வரலாற்றில் புகுத்தியுள்ளனர் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள்.

இப்போதும் மெக்காலேயின் வாரிசுகளும், திராவிட இயக்கத்தினரும், கம்யூனிச இயக்கவாதிகளும் மேற்கண்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகி பிராமணர்கள் வேறு, தமிழர்கள் வேறு என பிரசாரம் செய்துவருகின்றனர்.

கடவுள் இல்லை என்று சொல்கிற நாத்திகர்கள், சிதம்பரம் கோயில் வழிபாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்ய முயற்சிப்பது நமது சமய நம்பிக்கைகளை அழிக்கும் முயற்சியாகும்.

சிதம்பரம் கோயிலில் சிற்சபை (சிற்றம்பலம்) என்பது இறைவனின் கருவறையாகும். சிற்சபைக்கு முன்பு பொற்சபை (பொன்னம்பலம்) உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மட்டும்தான் அனைவரும் சாதிபேதமின்றி கருவறை (சிற்சபை) வரை சென்று இறைவனை வழிபடலாம்.

பாரம்பரியமாக தேவாரம் பாடுவதற்கு அங்கே இடமிருக்கிறது என்பது மட்டுமல்ல, தேவாரம் தினசரி பாடவும்படுகிறது. காசி திருப்பனந்தாள் திருமடத்திலிருந்து ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது என்பது அன்றாடம் நடைபெறும் உண்மையாகும்.

ஆனால் தற்போது சிதம்பரம் திருக்கோயிலில் தேவாரம் பாடுவதற்குத் தடை இருப்பது போலவும், சிதம்பரம் தீட்சிதர்கள் தமிழுக்கு எதிரானவர்கள் போலவும் சித்திரிக்கப்படுகிறது. சிற்றம்பல மேடை என்கிற பெயர் சிற்சபைக்கு சமீப காலத்தில் திராவிட இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளால் ( மகஇக) சூட்டப்பட்ட பெயராகும்.

நீண்ட காலமாகவே திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோயில்களை அவமதிக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள், "தில்லை நடராஜரையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளே தமிழகத்தின் பொன்னாள்' என்று சொல்லி இறை துவேஷத்தையும், பிராமண துவேஷத்தையும் வளர்த்து வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோயிலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் கருவறை நுழையும் போராட்டம் என அறிவித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து ரங்கநாதருக்கு செருப்பு மாலை போட்டு அசிங்கப்படுத்தி அருவெறுக்கத்தக்க செயலைச் செய்தவர்கள் இவர்கள்.

இப்படிப்பட்ட மகஇகவினரும், திராவிட கழகத்தினரும் மீண்டும் கருவறைக்குள் நுழைந்து இறைவனை அவமதிக்கும் உள்நோக்கத்தோடுதான் ஆறுமுகசாமி என்கிற ஓர் ஆன்மிகவாதியை முன்னிறுத்தி சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடவேண்டும் என்கிற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றக் கூடிய மரபுகளையும், சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் மீற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம். குறிப்பாக ஹிந்துக் கோயில்களை சர்ச்சைக்குரிய இடங்களாக மாற்றுவது இவர்களின் குறிக்கோள். அதற்கு ஆறுமுகசாமி உள்ளிட்ட சில ஆன்மிகவாதிகளும் பலியாகியுள்ளனர். ஊடகங்கள் போராட்டம் நடத்தும் மகஇகவினரையும், திராவிட இயக்கத்தவரையும் சிவனடியார்கள் எனக் குறிப்பிடுவதுதான் வேடிக்கை.
இறைமறுப்புக் கொள்கை உடையவர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஆன்மிக விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? தமிழுக்காக என்கிற கோஷம்தான் காரணம் என்றால், ஏனைய மதங்களிலும் தமிழில்தான் வழிபாடு என்று சொல்லித் தட்டிக் கேட்கும் தைரியம் இவர்களுக்கு இருக்கிறதா?

சொல்லப்போனால், தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றியிருப்பது இந்து மதம்தான். தில்லை நடராஜரை பீரங்கி வைத்துப் பிளக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள், சிவபெருமான் புகழ்பாடும் தேவாரத்துக்கு வக்காலத்து வாங்குவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் கண்ணீர் விட்ட கதையை நினைவுபடுத்துகிறது.

சிதம்பரம் திருக்கோயிலின் பூஜை உரிமைகள் தில்லைவாழ் அந்தணர்களுக்கு (தீட்சிதர்) பாரம்பரியமாக உரியதாகும். அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், அவர்களை மிரட்டி பணிய வைக்கும் முறையிலும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதுதான் உண்மை.

தில்லைவாழ் அந்தணர்களின் பாரம்பரிய உரிமையான சிதம்பரம் நடராஜர் கோயிலை, அறநிலையத்துறையின் கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சி, திமுக ஆட்சிக்கு வந்ததுமுதலே தொடங்கியது. நகரத்தார்களின் நன்கொடைகளும், பக்தர்களின் காணிக்கையும்தான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் பராமரிப்புக்கு உதவுகின்றன. தில்லைவாழ் அந்தணர்களின் வாழ்வும் இந்த ஆலயத்துடன் பின்னிப் பிணைந்துதான் தொடர்கிறது. இவர்களிடமிருந்து ஆலய நிர்வாகம் அரசின் பொறுப்பில் வந்தால்தான் அரசியல்வாதிகளுக்குப் பிழைப்பு நடக்கும் என்பதால், அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்னையைப் பெரிதுபண்ணி தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன.
சிதம்பரம் திருக்கோயிலும், தில்லைவாழ் அந்தணர்களும் தமிழர்களின் ஆன்மிக அடையாளங்கள். தீட்சிதர்களின் தாய் மொழி தமிழே. சோழ மன்னர்களுக்கு முடிசூட்டும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே உரியது.

ஒருமுறை போரில் சோழ மன்னர்கள் தோற்று நாட்டை இழந்தபோது, வென்ற அன்னிய மன்னனுக்கு முடிசூட்ட மறுத்து தமிழ் மண்ணுக்கு விசுவாசம் காட்டியவர்கள் இந்தத் தில்லைவாழ் அந்தணர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதைப்பற்றி இவர்கள் ஏன் பேசுவதில்லை?

ஆட்சியாளர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ சமய விஷயங்களில் உத்தரவு போடுவதற்கு உரிமை கிடையாது. அப்படியே பூஜை முறைகளிலும், ஆலய நிர்வாகங்களிலும் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டும் எனில் சமயத் தலைவர்களும், குருமார்களும், மடாதிபதிகளும், ஆதீனங்களும் கூடி முடிவெடுக்கலாம். அதுதான் முறை. இறை நம்பிக்கையற்றவர்கள், இறை வழிபாடு பற்றிப் பேசும் அருகதையற்றவர்கள்.

தமிழின் பெயரால், தேவாரத்தின் பெயரால் சிதம்பரம் கோயிலை சர்ச்சைக்குரியதாக மாற்றி வருகிறார்கள். இது இறை நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலே தவிர தில்லைவாழ் அந்தணர்களுக்கு எதிரானது என்று நினைத்தால் தவறு. இந்த விஷயத்தில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஒன்றுபட்டு செயல்பட்டாக வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

-
நன்றி தினமணி

No comments: