மதம் மாறியவர்கள் இந்துவாக மாறும் விழா நெல்லையப்பர் கோவிலில் இன்று நடக்குமா?
திருநெல்வேலி :மதம் மாறியவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாறும் நிகழ்ச்சியை இன்று நெல்லையப்பர் கோவிலில் நடத்த இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில், இந்து மதத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு மாறுபவர்களுக்கு ஆரம்பத்தில் தரப்படுவதாகக் கூறப்பட்ட சலுகைகள் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, தலித் மக்கள் மதம் மாறினாலும் கூட அவர்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை. மற்ற ஜாதியினரை புதைக்கும் இடத்தில் மதம் மாறிய தலித்கள் புதைக்க அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, தாங்கள் மீண்டும் இந்து மதத்திற்கே வர உள்ளதாக கூறியுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி செய்து வருகிறது.
இது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, ராதாபுரம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 185 குடும்பத்தினர் மற்ற மதங்களில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாற உள்ளார்கள். ஒருவர் கிறிஸ்தவராக மாற சர்ச்சுக்கு செல்கிறார். இஸ்லாமியராக மாற அவர்களின் வழிபாட்டு தலத்திற்கு செல்கிறார். அது போல, இந்துவாக மாற நெல்லையப்பர் கோவிலுக்கு வருவது தானே சரியாகும்.
நெல்லையப்பர் கோவில் அமைக்க பெருமுயற்சி எடுத்தது மன்னன் நின்றசீர் நெடுமாறன். சமண மதத்திற்கு மாறிய நெடுமாறன் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய வரலாறு உண்டு. நெல்லையப்பர் கோவிலில் நெடுமாறன் பெயரில் உள்ள அரங்கில் தான் மதம் மாறும் விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால், இதற்கு அறநிலையத்துறையினர் அனுமதி மறுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். அரசியல் விழாக்கள் கொண்டாடுகிறார்கள். வெளிநாட்டு கிறிஸ்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கிறார்கள். ஆனால், இந்துவாக மாற அனுமதி கிடையாதாம். எதிர்ப்பையும் மீறி, இன்று (6ம் தேதி) வியாழக்கிழமை மாலையில் இரண்டு குடும்பங்கள் மட்டும் இந்துக்களாக மாறும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் ஏப்ரல் 14ல் அம்பேக்தர் பிறந்த தினத்தில் 185 குடும்பங்களையும் இந்துக்களாக மாற்றும் நிகழ்ச்சியை நெல்லையில் நடத்தவுள்ளோம். இதில், பல்வேறு மடாதிபதிகள் பங்கேற்பார்கள் என்றார்.
எதிர்ப்பு போர்டு...! :சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாட எதிர்ப்பு வந்ததை போல, நெல்லையப்பர் கோவிலிலும் இந்துக்களாக மாற அறங்காவலர் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறநிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், மதமாற்றம் என்பது மாவட்ட அளவிலான அதிகாரி முன்னிலையில் நடக்க வேண்டிய ஒன்று. அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றுகளை அந்த அதிகாரியிடம் அளிக்க வேண்டும். இதனை அரசிதழில் பதிவு செய்வார்கள். மேலும், நெல்லையப்பர் கோவில் அரங்கில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மற்ற அரசியல் கட்சிகளும் களம் இறங்கினால் கோவிலின் புனித தன்மை பாதிக்கப்படும் என்பதால் அனுமதி மறுத்துள்ளோம் என்றார். இந்து மக்கள் கட்சியினர், இந்து முன்னணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்பினர் மதம் மாறும் நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்க உள்ளதால், பிரச்னை ஏற்படலாம் என போலீசார் குவிக்கப்படுகின்றனர். மதம் மாறும் நிகழ்ச்சிக்கு எதிராக செயல்படும் அறங்காவலர் குழுவினரை கண்டித்து பா.ஜ., கட்சியினர், நெல்லையப்பர் கோவில் முன் தட்டிபோர்டு வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment