Monday, March 10, 2008

வன்னிய கிறிஸ்துவர்களும் தலித் கிறிஸ்த்துவர்களும் மோதியதில் 2 பலி

துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

Sunday, 09 March, 2008 01:43 PM


விழுப்புரம், மார்ச்.9: உளுந்தூர்பேட்டை அருகே வன்னிய கிறிஸ்தவர்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று காலை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள். மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.
.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப் பட்டு ள்ளனர். மாவட்ட கலெக்டர் பிரஜேந்திர நவ்னீத் அங்கு முகாமிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை கள்ளக்குறிச்சி சாலையில் எறையூர் என்ற கிராமம் உள்ளது. உளுந்தூர் பேட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமம் எளவனாட்டூர் காவல்துறை சரகத்திற்கு உட்பட்டது ஆகும்.

இங்கு 2 ஆயிரம் வன்னிய கிறிஸ்தவ குடும்பங்களும், 150 தலித் கிறிஸ்தவ குடும்பங்களும் வசிக்கின்றன. வன்னி கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த 5,000 பேரும், தலித் கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த 500 பேரும் இங்கு வாழ்கிறார்கள்.

வன்னிய கிறிஸ்தவர்களுக்காக தேவாலயம் உள்ளது. இதில் மற்றவர்களோடு சேர்ந்து வழிபாடு நடத்துவதற்கு தங்களையும் அனுமதிக்க வேண்டுமென்று தலித் கிறிஸ்தவர்கள் நீண்ட நாளாக வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு இணங்காத வன்னிய கிறிஸ்தவர்கள் தலித் கிறிஸ்தவர்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கித் தந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை ஏற்றுக்கொள்ளாத தலித் கிறிஸ்தவர்கள் தங்களுக்காக தனி தேவாலயம் கட்டினர். இதற்கு ஒரு பாதிரியாரை நியமிக்குமாறு புதுச்சேரி யில் வசிக்கும் மத தலைவரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தலித் கிறிஸ்தவர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3 தினங்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

இப்பிரச்சனை குறித்து தெரிய வந்ததும் விடுதலைச் சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் இன்று எறையூர் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த வன்னிய கிறிஸ்தவர்கள் ஆத்திர மடைந்த தாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டு சென்று தலித் கிறிஸ்தவர்கள் கட்டியிருந்த தேவாலயத்தை கடுமையாக சேதப்படுத்தியதாகவும் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த மோதலில் குழந்தைசாமி (வயது 33), யேசுதாஸ் (வயது 53), மார்க் (வயது 60), மாரியம்மாள் (வயது 40), தியாகராஜன் (வயது 50), அந்தோணி ராஜ் (வயது 24), சூசை (வயது 84), சீமோன் (வயது 65) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் உளுந்தூர்பேட்டை, சேலம், விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் குறித்து தகவல் கிடைத்ததும் விழுப்புரம் போலீஸ் கண்காணிப் பாளர் அமல்ராஜ் போலீசாருடன் அங்கு சென்று அமைதி ஏற்படுத்த முயன்றதாகவும், ஆனால் நிலைமை மோசமடையவே காலை 10 மணியளவில் போலீசார் துப்பாக்சிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் வன்னிய கிறிஸ்தவரான மோயிஸ் என்பவரின் மகன் பெரியநாயகம் (வயது 40) என்பவர் குண்டடி பட்டு இறந்தார். முரளி என்ற மற்றொருவரும் குண்டு இரையானதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனை மறுக்கும் போலீசார் நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் வன்னிய கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த தேவசகாயம் என்பவர் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தலித் கிறிஸ்தவர் 3 பேர் காயங்களுடன் இதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பிரஜேந்திர நவ்னீத் சம்பவ இடத்திற்கு சென்று முகாமிட்டுள்ளார். சென்னையிலிருந்து உயர் காவல் துறை அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடந்த எறையானூர் கிராமத்தில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. யாரும் அங்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்கும் பொருட்டு ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியான இருவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

1 comment:

Anonymous said...

(Matthew 10:34) - "Do not think that I came to bring peace on the earth; I did not come to bring peace, but a sword. 35"For I came to set a man against his father, and a daughter against her mother, and a daughter-in-law against her mother-in-law; 36and a man’s enemies will be the members of his household."
(Luke 12:51) - "Do you suppose that I came to grant peace on earth? I tell you, no, but rather division; 52for from now on five members in one household will be divided, three against two, and two against three..."