Monday, August 11, 2008

கைதிகளுக்கு செல்போன், கஞ்சா: புழல் சிறை வார்டன் சாலமன் கைது

கைதிகளுக்கு செல்போன், கஞ்சா: புழல் சிறை வார்டன் கைது
சனிக்கிழமை, ஆகஸ்ட் 2, 2008


சென்னை: சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன், கஞ்சா ஆகியவற்றை பணம் வாங்கிக் கொண்டு கடத்திய சென்னை புழல் மத்திய சிறை வார்டனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை புழல் சிறையில் 2வது நிலை வார்டனாக பணியாற்றியவர் சாலமன் (30). இவர் மூலம் புழல் ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

சிறைக்குள் பொருட்களை கடத்த கைதிகளின் உறவினர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்குவதாகவும் தகவல்கள் வந்தன. இதையடுத்து ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீசார் சாலமனின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வடபழனியைச் சேர்ந்த சங்கர் என்பவர், சாலமனை சந்தித்தார். சிறையில் உள்ள தன் நண்பருக்கு செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட்களை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தன் நண்பருக்கு வசதியான அறை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு ரூ.8,000 கொடுத்தால் செய்து தருவதாக சாலமன் கூறியுள்ளார்.

இதையறிந்த ஊழல் கண்காணிப்பு பிரிவு போலீசார், சங்கரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், சங்கர் மூலம் சிறை வார்டன் சாலமனை பொறி வைத்து பிடிக்கத் திட்டமிட்டனர்.

ஏஎஸ்பிக்ககள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் அமல்ராஜன், குமர குருபரன், சய்யது ரகுமான், கஜேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சங்கரை வைத்து பணம் கொடுக்க லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஏற்பாடு செய்தனர். அதன்படி சங்கர், சாலமனுக்கு போன் செய்தார். கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்து பணத்தை கொடுக்கும்படி சாலமன் கூறினார்.

அதன்படி நேற்றிரவு 8 மணிக்கு சங்கர் பணத்துடன் கோயம்பேடு சென்றார். அவரை தனிப்படை போலீசார் மப்டியில் கண்காணித்தனர். ஆனால் சாலமன் வரவில்லை. சங்கர் போன் செய்ததற்கு, கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகில் நிற்பதாகவும் அங்கு வந்து பணத்தை கொடுக்கும்படியும் சாலமன் கூறினார்.

சிறிது நேரம் கழித்து சங்கருக்கு சாலமன் போன் செய்தார். விருகம்பாக்கம் அருகே ஒரு வேலையாக வந்து விட்டேன். விருகம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்து பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று சாலமன் கூறினார்.

இதையடுத்து உடனே அங்கு சங்கர் சென்றார். அவரை மப்டி உடையில் இருந்த போலீசார் பின் தொடர்ந்தார். குறிப்பிட்ட பெட்ரோல் பங்க் அருகில் சாலமன் நின்று கொண்டிருந்தார். சங்கர் அவரிடம் சென்று பேசினார். பிறகு ரூ.8,000த்தை கொடுத்தார்.

அதை சாலமன் வாங்கி பைக்குள் வைத்துக் கொண்டார். அப்போது போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். இதனால் சாலமன் அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை விரட்டி சென்றனர்.

சுமார் 30 நிமிடம் விரட்டச் சென்று இரவு 10 மணிக்கு சாலமனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

புழல் ஜெயில் கைதிகளிடம் செல்போன், சிம்கார்டு நடமாட்டம் தாராளமாக உள்ளது. எனவே சாலமன் எத்தனை பேருக்கு செல்போன் கடத்தி கொடுத்தார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவரிடம் பணம் கொடுத்த சங்கர், சிறையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தனது நண்பர் அந்தோணிக்காக தனி அறை கேட்டது விசாரணையில் தெரிய வந்தது. இது போல தீவிரவாதிகளுக்கும் வார்டன் சாலமன் உதவிகள் செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தான் வாங்கும் லஞ்ச பணத்தில் ஒரு பகுதியை உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கொடுப்பதாக சாலமன் கூறியதாக தெரிகிறது.

No comments: