பயங்கரவாதிகளுக்கு குவியும் அன்னிய நிதி-15 நாடுகளுக்கு இந்தியா கடிதம்!
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 8, 2008
மும்பை: இந்தியாவில் உள்ள சில தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கும் சட்டவிரோதமாக, வெளிநாடுகளிலிருந்து பணம் குவிகிறது. இதனை அனுப்பி வைப்பது யார் எனத் தெரிந்து கொள்ள இந்திய அரசு 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ரகசிய கடிதம் அனுப்பியுள்ளது.
தொண்டு அமைப்புகளின் பெயரில் பல்வேறு நாடுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடக்கிறது. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு சில பயங்கரவாதிகள் இந்த வழியில் ஏராளமாய் பணம் குவித்து நாட்டில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதைக் கண்டுபிடித்து ஆரம்பத்திலேய் கிள்ளியெறிய எடுக்க மத்திய நிதி அமைச்சகத்தில், நிதித்துறை உளவு அமைப்பு செயல்படுகிறது. ஆனால் இவர்கள் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு பணம் குவிக்கும் கில்லாடிகள் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சந்தேகத்துக்கு இடமான வகையில் பணம் போவதையும், அதுபோல,வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் வருவதையும் இந்த அமைப்பு தற்போது தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது.
சந்தேகத்துக்கு இடமான வகையில் இந்தியாவில் உள்ள சில அமைப்புகளுக்கு சமீபத்தில் பணம் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பின்னணியில் பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற சில நாடுகள் உள்ளது சமீபத்திய சம்பவங்களில் நிரூபணமாகி வருகிறது.
சவுதியில் உள்ள சில அமைப்புகளிடம் இருந்து இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய முறையில் பணம் வருவதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த பணத்தை பிரிவினைவாத அமைப்புகள் நேரடியாகப் பெறாமல், வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அல்லது மைனாரிட்டி அமைப்புகள் மூலம் பெற்று வருகின்றன.
சந்தேக பணப் பரிவர்த்தனை:
இதேபோல இந்தியாவில் உள்ள சில அமைப்புகளும், மற்ற நாடுகளில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமான முறையில் பணம் அனுப்பி வருகின்றன.
இதை கண்டுபிடித்து தரும்படி, இதுவரை, 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. நிதி அமைச்சக உளவுப் பிரிவும் இதைத் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இப்போது இதே போன்றதொரு கோரிக்கையை இந்திய அரசும் 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. நிதித்துறை உளவுப் பிரிவு இயக்குநர் அருண் கோயல் இதை சமீபத்தில உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அவை எந்தெந்த நாடுகள் என்பதை அவர் வெளியிடவில்லை.
கடந்தாண்டு, வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துள்ள பணப் பரிவர்த்தனையின் எண்ணிக்கை மட்டுமே 65 லட்சம். இதில் கைமாறிய தொகை பல ஆயிரம் கோடிகள். இவற்றில் 2700 பரிவர்த்தனைகள் சந்தேகத்துக்கிடமானவை என அரசு கண்டுபிடித்துள்ளது.
இதிலும் 1300 பரிவர்த்தனைக்கான கணக்குகள் தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. தக்க ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் அனைத்துக் கணக்குகளையும் முடக்கிவிடவும் நிதி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
No comments:
Post a Comment