Thursday, February 07, 2008

கந்தஹார் விமானக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 3 இந்திய முஸ்லீம்களுக்கு ஆயுள் தண்டனை

கந்தஹார் விமானக் கடத்தல் வழக்கு - 3 பேருக்கு ஆயுள்
புதன்கிழமை, பிப்ரவரி 6, 2008

பாட்டியாலா: 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகருக்கு கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அப்துல் லத்தீப் ஆதம் மொமீன் என்கிற அப்துல் ரஹ்மான் படேல், யூசுப் நேபாளி, தலிப் பூஜைல் ஆகிய அந்த மூவருக்கும் பாட்டியாலா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இந்தர்ஜித் சிங் வாலியா நேற்று தண்டனை விதித்தார்.

3 பேரில் லத்தீப்புக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ கோரியிருந்தது. இருப்பினும் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், லக்னோ மீது பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் காத்மாண்டு நகரிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தினர். பின்னர் விமானம் கந்தஹாருக்குக் கொண்டு செல்லப்பட்டது. கந்தஹார் விமான நிலையத்தில் விமானம் ஐந்து நாட்களுக்கு வைக்கப்பட்டிருந்தது.

இப்ராகிம் அத்தார், சன்னி அகமது குவாஸி, சையத் என்கிற டாக்டர், மிஸ்த்ரி என்கிற போலா, வர்மா என்கிற ஷகீர் ஆகிய ஐந்து பேர்தான் விமானத்தைக் கடத்தினர்.

விமானத்தை விட வேண்டும் என்றால், ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். இதை இந்திய அரசு ஏற்று விடுவித்தது. அஸாருடைய சகோதரர்தான் இப்ராகிம் அத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து விமானத்தை தீவிரவாதிகள் விடுவித்தனர். மேற்கண்ட ஐந்து தீவிரவாதிகளுக்கும், நேற்று தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் தங்க இடம் கொடுத்தது, போலி பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தது, டிக்கெட் எடுத்துக் கொடுத்தது, ஆயுதங்கள், வெடிபொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி வாலியா, வேறு ஒரு பிரிவில் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தார். இன்னொரு பிரிவின் கீழ் அவர்களுக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 2000 அபராதம் விதிக்கபப்ட்டது. மேலும் 342வது பிரிவின் கீழ் அவர்களுக்கு தலா 7 ஆண்டு தண்டனை மற்றும் ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

3 பேரின் தண்டனையையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அவர்களின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: