லிபியாவில் தவித்த 26 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர்
செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 12, 2008
நன்றி தட்ஸ்டமில்
திருநெல்வேலி: லிபியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 26 தமிழர்களும் விடுவிக்கப்பட்டனர்.
மதுரை, மேலூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 26 தமிழர்கள் கணேசன் என்ற ஏஜென்டிடம் தலா ரூ.80,000 பணத்தை செலுத்தி லிபியாவுக்கு வேலைக்கு சென்றனர்.
ஆனால் அங்கு இவர்களுக்கு ஒழுங்காக சம்பளமும், உணவும் தரப்படாமல் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (35) என்பவர், இதுகுறித்து தென்காசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. அப்பாத்துரைக்கு பேக்ஸ் மூலம் இதைத் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை அப்பாத்துரை எம்.பி. பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கொண்டு சென்றார். லிபியா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதன் பின்னர் அவர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 26 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் அவர்கள் சென்னைக்கு திரும்புவார்கள் என அப்பாத்துரை எம்பி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment