Tuesday, February 19, 2008

திரையில் தேவர் திருமகன் வாழ்க்கை வரலாறு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தமிழகத்தின் மாபெரும் அரசியல்-சமூக சக்தி. மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் முக்குலத்து சமுதாய மக்களின் இதயங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர்.

பல அரசியல் கட்சிகள் இன்றும் இவர் பெயரைச் சொல்லித் தான் அரசியிலில் தப்பி பிழைத்துக் கொண்டிருக்கின்றன. தென் மாவட்ட முக்குலத்தோர் மக்கள் தங்கள் கடவுளாகவே போற்றும் தலைவர். சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜிக்கு கை கொடுத்த தோழர்.

அவரது நூற்றாண்டு பிறந்த தின விழா இந்த ஆண்டு ெகாண்டாடப்படுகிறது.

இதனை அர்த்தமுள்ளதாக நினைவு கூறும் விதத்தில் ஒரு முயற்சியை மேற்கொள்ளனர் பத்திரிகையாளராக இருந்து திரைப்பட இயக்குநராக மாறியுள்ள ஆபிரகாம் லிங்கனும், பிரபல விளம்பர நிறுவன உரிமையாளரான ஐ.பி.கார்த்திகேயனும்.

பசும்பொன் தேவர் வரலாறு எனும் பெயரில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை திரைவடிவமாக்கியுள்ளார் ஆபிரகாம் லிங்கன். இதை தனது பாபிலோன் கம்யூனிகேஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார் கார்த்திகேயன்.

ஒன்றேகால் மணி நேரம் ஓடக்கூடிய இந்த திரைப்படம் குறித்து ஆபிரகாம் லிங்கன் நம்மிடம் கூறியதாவது:

ஒரு குருபூஜை தினத்தில்தான் பசும்பொன் தேவர் ஐயா பற்றி திரைப்படம் எடுக்கும் எண்ணமே எனக்குள் உதித்தது. எந்தத் தலைவரின் சமாதியிலாவது 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கூடி அஞ்சலி செலுத்தியதைப் பார்த்திருக்கிறீர்களா... நான் பார்த்தேன், அசந்து போனேன்.

அன்றிலிருந்து அவரது வாழ்க்க வரலாற்றை முழுமையாக ஆராயும் முயற்சியில் இறங்கினேன். இதற்காக அவர் வாழ்ந்த புளிச்சிக்குளம், அவரது பாதம் பட்ட பல்வேறு கிராமங்கள் என விரிவான பயணம் மேற்கொண்டேன். அவரது வாழ்க்கையை முழுமையாகத் தெரிந்து கொண்ட பிறகு வியந்துபோய் நின்றேன்.

இப்படிப்பட்ட மாமனிதரின் வாழ்க்கையை இந்த ஒரு சிறு படத்தில் சொல்லிவிட முடியுமா என்ற மலைப்பு அது. ஆனாலும் தயாரிப்பாளர் கார்த்திக்கேயன் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்போடு முழு வடிவம் கொடுத்துள்ளேன்.

தேவர் ஐயாவின் வாழ்க்கையைச் சொல்ல வெறும் ஒன்றேகால் மணிநேர திரைப்படம் போதாதுதான். ஆனாலும் ஒரு சவாலாகவும் ஒரு மாபெரும் தலைவருக்கு என்னாலான சமர்ப்பணமாகவும் இந்தப் படத்தைச் செய்து முடித்தேன் என்கிறார் ஆபிரகாம்.

தேவரின் பர்மா பயணத்தின் போது எடுக்கப்பட்ட 30 நிமிட வீடியோ காட்சிகளைத் தவிர, அவர் சம்பந்தப்பட்ட வேறு எந்த படக்காட்சிகளும் இல்லையாம். எனவே அந்த முப்பது நிமிடக் காட்சிகளை இடத்துக்கேற்ப பயன்படுத்தி உள்ளாராம் ஆபிரகாம். சில காட்சிகளில், தேவரின் வீடியோ உருவத்தை அடிப்படையாக வைத்து 3-டி அனிமேஷன் முறையில் காட்சிகளை உருவாக்கியுள்ளாராம். தேவர் கைதாகி சிறையில் இருக்கும் காட்சிகளுக்கும் ஒரிஜினல் வீடியோவையே பயன்படுத்தியுள்ளாராம்.

மிகுந்த சர்ச்சைக்குரிய முதுகுளத்தூர் சம்பங்களைக் கூட இந்தப் படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறோம். அதன் நிஜமான பின்னணியை இன்றைய தலைமுறைக்குச் சொல்லும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட, கலவரத்தின்போது சாட்சியாக இருந்த பலரது கருத்துக்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன.

தனக்கு சொந்தமான 32 ஏக்கர் எஸ்டேட்டையே அனைத்து ஜாதி மக்களுக்கும் பகிர்ந்து கொடுத்தவர் தேவர். வாழ்ந்தவரை மட்டுமல்ல, மரணத்துக்குப் பின்னரும் பலரை வாழவைத்துக் கொண்டிருப்பவர். இந்தத் தலைமுறைக்கு அவரைப் பற்றிய சரியான ஒரு அறிமுகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் படம் என்கிறார் ஆபிரகாம்.

தேவர் வாழ்ந்த, நடமாடிய இடங்களான மதுரை, பசும்பொன், டி.கல்லுப்பட்டி, ராமநாதபுரம், உறையூர், திருச்சி, ஆடுதுறை, மேலூர் என பல பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம்.

தேவர் இறை உணர்வு பெற்ற பிறகு ஐந்து முக விநாயகர் கோயில் ஒன்றை கட்டினார். முதல் முறையாக கட்டப்பட்ட பஞ்சமுக விநாயகர் கோயில் தேவர் கட்டியதுதானாம். இந்தக் கோயிலிலும் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

இந்தப் படத்தில் 3 பாடல்களும் உண்டு. யுகபாரதி எழுதியிருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

படத்தின் இயக்குநர் ஆபிரகாம் தினத்தந்தி, கதிரவன், தினமலர், தினகரன் உள்ளிட்ட பல நாளிதழ்களில் செய்தியாளராக இருந்தவர்.

நன்றி
தட்ஸ்டமில்

No comments: