நக்ஸல்கள் துணிகரம்-காவல் நிலையத்தில் துப்பாக்கிகள், வாக்கி டாக்கி கொள்ளை
சனிக்கிழமை, பிப்ரவரி 9, 2008
தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த ஒரு கும்பல், அதை சூறையாடிவிட்டு அங்கிருந்த துப்பாக்கிகள், வாக்கி டாக்கிகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது. இவர்கள் நக்ஸலைட்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தர்ம்புரி மாவட்டத்தில் எப்போதுமே நக்ஸல்கள் நடமாட்டம் அதிகம். இதனால் இந்தப் பகுதியில் எப்போதும் தீவிர நக்ஸல் கண்காணிப்பில் போலீசாரும் உளவுப் பிரிவினரும் ஈடுபடுவது வழக்கம். இந் நிலையில் தான் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த காவல் நிலையத்தில் நேற்றிரவு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டுகள் சுப்பிரமணமி, ராஜா, ராஜமாணிக்கம் ஆகியோர் பணியில் இருந்தனர்.
இதில் மூன்று காவலர்கள் ரோந்துப் பணிக்காக வெளியில் சென்ற நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு ஒரே ஒரு காவலர் மட்டும் இருந்துள்ளார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் காவல் நிலையத்திற்குள் புகுந்துளளது.
ஒரு காவலர் மட்டுமே இருந்ததால் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. இதையடுத்து அந்தக் கும்பல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த அறையை உடைத்துத் திறந்து அங்கிருந்த 6 துப்பாக்கிளையும், காவலர் வசம் இருந்த வாக்கி டாக்கியையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் டி.ஐ.ஜி. செண்பகராமன், தர்மபுரி எஸ்.பி. நஜ்முல் ஹோடா, கூடுதல் எஸ்.பி. சுந்தரராஜன், டி.எஸ்.பி. விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொள்ளையர்கள் விட்டுச் சென்ற 2 இரும்பு கம்பிகள் கைப்பற்றப்பட்டன. கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
மோப்ப நாய்ப் படையும் கொண்டு வரப்பட்டது. மோப்ப நாய்கள் ஊருக்குள் ஓடி அங்கு ஓரிடந்தில் கிடந்த வைக்கோல் போர் வரை சென்று நின்றுவிட்டன.
இந்த துணிகர செயலில் ஈடுபட்டது நக்ஸலைட்டுகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச் சம்பவத்தையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. க்யூ பிராஞ்ச் மற்றும் நக்சலைட்டு பிரிவு போலீசார் மலை கிராமங்கள், மற்றும் காட்டு பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வாக்கி டாக்கியை திருடி சென்றுள்ளதால் தர்மபுரி மாவட்ட போலீசார் வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறிக் கொள்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment