Wednesday, August 13, 2008

சென்னையில் பாஜக மறியல்-இல.கணேசன், திருநாவுக்கரசர் கைது

'அமர்நாத்': சென்னையில் பாஜக மறியல்-இல.கணேசன், திருநாவுக்கரசர் கைது
புதன்கிழமை, ஆகஸ்ட் 13, 2008





சென்னை: அமர்நாத் கோவிலுக்கு மீண்டும் நிலம் வழங்க கோரி சென்னையில் பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அக் கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன், தேசிய துணைச் செயலாளர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோவிலுக்கு அந்த மாநில அரசு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நிலத்தை திரும்பப் பெற்றது.

இதை எதிர்த்து காஷ்மீரில் இந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தேசிய அளவிலும் பாஜக, விஎச்பி ஆகியவை போராட்டம் நடத்தி வருகின்றன.

சென்னையிலும் இன்று பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடூபட்டனர்.

அண்ணாசாலை அண்ணா சிலை அருகே நடந்த இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல.கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் 5 நிமிடம் நடந்தது.

அப்போது அங்கு வந்த துணை கமிஷனர் லட்சுமி தலைமையிலான போலீசார் திருநாவுக்கரசர், இல.கணேசன் உள்பட 200 பேரையும் கைது செய்தனர்.

புதுச்சேரியிலும் பாஜக, விஎச்பியினர் கைது:

அதே போல புதுச்சேரியிலும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் விஎச்பியினர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன், விஎச்பி தலைவர் வில்வலிங்கம் ஆகியோர் தலைமையி்ல் அக்கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து அனைவரையும் கைது செய்தனர்.

No comments: