சிமி' இயக்கத்தின் மீதான தடை நீக்கம்
புதுடெல்லி, ஆக.6-
`சிமி' இயக்கத்தின் மீதான தடையை நீக்கி நடுவர் மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
`சிமி' இயக்கத்துக்கு தடை
இந்தியாவில் நடந்த சில தீவிரவாத செயல்களில் `சிமி' என்று அழைக்கப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அந்த இயக்கத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி மத்திய அரசு தடை விதித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடையை மத்திய அரசு நீடித்து வந்தது.
கடைசியாக கடந்த பிப்ரவரி 7-ந் தேதி சிமி இயக்கத்தின் மீதான தடையை 2010-ம் ஆண்டு வரை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
வழக்கு
இதை எதிர்த்து அந்த இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக அந்த இயக்கம் தாக்கல் செய்த மனுவில், சிமிஇயக்கத்தின் மீதான தடையை நீடிக்க புதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், முந்தைய ஆதாரத்தின் அடிப்படையில் தடையை நீடிக்க முடியாது என்றும் கூறி இருந்தது.
மராட்டிய மாநிலம் மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மட்டும் சிமி இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரம் காட்டி, அதன் அடிப்படையில் இந்த இயக்கம் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியதாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. எனவே தடையை நீடிக்க ஆதாரங்கள் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான சிறப்பு நடுவர் மன்றம் விசாரித்து வந்தது. விசாரணையின் போது, சிமி இயக்கத்தின் மீதான தடை நீடிப்புக்கு உரிய புதிய ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
தடை நீக்கம்
சிமி இயக்கத்தின் மீதான தடை நீடிப்பை நியாயப்படுத்துவற்கு புதிதாக எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை என்றும், எனவே அந்த இயக்கத்தின் மீதான தடை நீக்கப்படுவதாகவும் நீதிபதி கீதா மிட்டல் நேற்று உத்தரவிட்டார். பழைய ஆதாரத்தின் அடிப்படையில் தடையை நீடிக்க முடியாது என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார். போதிய ஆதாரம் இல்லாமல் எந்த ஒரு இயக்கத்தையும் தடை செய்ய முடியாது என்றும் அவர் கூறி உள்ளார்.
முதலில் இந்த வழக்கு விசாரணை திறந்த கோர்ட்டில் நடந்தது. பின்னர் உள்துறை அமைச்சக செயலாளர், இந்திய புலனாய்வு அதிகாரிகள் முன்னிலையில் ரகசிய விசாரணை நடந்தது. விசாரணையின் போது அவர்கள் சிமி இயக்கத்துக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்தனர்.
மத்திய அரசு அப்பீல்
`சிமி' இயக்கத்தின் மீதான தடையை நீக்கி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்; `சிமி' இயக்கத்தின் மீதான தடையை நீக்கி சிறப்பு நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவு பற்றி உள்துறை அமைச்சகம் விரிவாக ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அதற்காக தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சிறப்பு நடுவர் மன்றத்தின் உத்தரவை முதல் கட்டமாக கவனமாக பரிசீலித்ததில், தொழில்நுட்ப அடிப்படையில் சிமி இயக்கத்தின் மீதான தடையை நடுவர் மன்றம் உறுதி செய்யவில்லை என தெரிய வருவதாகவும் அவர் கூறினார்.
சிமி இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டதற்காக மத்திய அரசு மீது பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
பா.ஜனதா புகார்
சிமி இயக்கத்தின் மீதான தடை நீடிப்பு நடவடிக்கையை பாதுகாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறி விட்டதாகவும், இது மத்திய அரசின் உண்மையான முகத்தையும், தீவிரவாதத்துக்கு எதிரான அதன் மென்மையான அணுகுமுறையை காட்டுவதாகவும் பாரதீய ஜனதா துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
சிமி இயக்கத்தின் மீதான தடை நீக்கம் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் இந்த தடை நீக்கத்தை பாரதீய ஜனதா எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில்; நாட்டை தீவிரவாதம் சூழ்ந்துள்ள நிலையில் சிமி இயக்கத்துக்கு எதிராக ஆதாரங்களை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் தவறி விட்டதாகவும் எனவே உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.
No comments:
Post a Comment