அசாம் மாநிலத்தில் 3 இடங்களில் குண்டு வெடித்தது: சுதந்திர தின அணி வகுப்பை சீர்குலைக்க சதி
புதுடெல்லி, ஆக. 15-
அசாம் மாநிலத்தில் இன்று சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. உல்பா தீவிரவாதிகள் மிரட்டல்கள் காரணமாக அசாம் மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பலத்த பாதுகாப்பையும் மீறி அசாமில் இன்று தீவிரவாதிகள் நாசவேலை செயல்களில் ஈடுபட்டனர். 3 இடங்களில் குண்டு வெடித்தது.
சிரங் மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நடக்க இருந்த மைதானத்தில் இன்று காலை 8.25 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. இது ஆர்டிஎக்ஸ் வகை வெடி குண்டாகும். சக்தி வாய்ந்த இந்த குண்டு வெடித்தபோது அணிவகுப்பு மைதானத்தில் யாரும் இல்லை.
இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. என்றாலும் சிறிது நேரம் கழித்து அந்த அணிவகுப்பு மைதானத்தில் சுதந்திர தின கொண்டாடங்கள் நடந்தன.
8.40 மணிக்கு துப்ரி மாவட்டத்தில் உள்ள தர்மசா லாவில் 2-வது குண்டு வெடித்தது. இந்த குண்டு சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
போலீசார் அந்த இடத்தை முற்றுகையிட்டு சோதனையிட்டனர். அதன் பிறகு 9 மணிக்கு அங்கு சுதந்திர தினவிழா நடந்தது.
3-வது குண்டு துப்ரி மாவட்டத்தில் உள்ள கவுரிப்பூர் அணிவகுப்பு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள ஒரு மரத்தில் குண்டை கட்டி வைத்திருந்தனர். 8.48 மணிக்கு அந்த குண்டு வெடித்தது.
இதிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. திட்டமிட்டப்படி 9.10 மணிக்கு அங்கு சுதந்திர தினவிழா நடந்தது.
சுதந்திர தின அணி வகுப்புகளை சீர்குலைத்து பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படுத்த உல்பா தீவிரவாதிகள் திட்டமிட்டு 3 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.
குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அசாமில் உள்ள முக்கிய நகரங்களில் மக்களிடம் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment