நெல்லை நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் 3 பேரும் ஆஜர்
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 12, 2008
நெல்லை: போலீஸ் காவல் முடிந்த நிலையில், தீவிரவாதிகள் அப்துல் கபூர், ஹீரா, அலி அப்துல்லா ஆகியோரை போலீசார் நேற்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் சுதந்திர தினத்தன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் அப்துல் கபூர், ஹீரா, பூழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலி அப்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை நீதிமன்றத்தின் அனுமதியுடன் இவர்கள் 3 பேரையும் போலீஸார் காவலில் எடுத்தனர். கடந்த 1ம் தேதி முதல் பாளை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மேலும் தீவிரவாதிகள் ஹீரா, சேக் அப்துல் கபூர் ஆகியோர் தங்கியிருந்த வீடுகளில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டைரி, வரைபடங்கள் சிக்கின. டைரியில் தலைமறைவு தீவிரவாதிகள் முகவரிகள், மற்றும் செல்போன் நம்பர்கள், குண்டு வைக்க தேர்வு செயயப்பட்ட இடங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், மார்க்கெட் மற்றும் முக்கிய அரசு அலுவலங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் ஹீரா, கபூர், அப்துல்லா ஆகியோரிடம் நேற்றுடன் விசாரணை முடிந்தது. இதையடுத்து நேற்று மாலை 4.55 மணிக்கு அவர்களை நெல்லை குற்றவியல் 4ம் எண் நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் மூன்று பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். தீவிரவாதிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள், அவர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், டைரிகள், வரைபடங்களையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
No comments:
Post a Comment