வாராங்கல்
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஆகஸ்டு 1 அன்று அதிகாலை கவுதமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து காக்கிநாடா செல்லும் கவுதமி எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவில் மெகபூபாபாத் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரெனத் தீப்பிடித்துக் கொண்டது. பின்னர் அந்தத் தீ அருகில் இருந்த மூன்று பெட்டிகளுக்கு மளமளவெனப் பரவியது. ஆகஸ்டு 1 அன்று அதிகாலை 1.05 மணியளவில் தல்லபுசலப்பள்ளி - மெஹ்பூபாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்துபோது எஸ்-9 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ மேலும் 4 பெட்டிகளுக்கு பரவியது. அதிகாலை என்பதால் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். தீ மளமளவெனப் பரவவே விழித்துக் கொண்ட பயணிகள் அலறித் துடித்தனர்.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறி அடித்து முட்டி மோதிக்கொண்டு கீழே இறங்கினர். காட்டுப் பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டதால் எளிதாக உதவி கிடைக்கவில்லை.
முதல் கட்ட தகவலில் கர்ப்பிணி மற்றும் ஒரு பெண் உள்பட 4 பேர் இறந்ததாகக் கூறப்பட்டது. தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாராங்கல் அரசு மருத்துவமனையில் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயினால் ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறி தான் பலர் இறந்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு ரெயில்வே உயரதிகாரிகள் விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருப்பதுடன், விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து ஹைதராபாத் - விஜயவாடா மார்க்கத்தில் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நட்ட ஈடு வழங்கப்படும் என்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment