நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் நேற்று முதல் செயல்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்கள் இதுநாள் வரை கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வெளியே வரும்போது இலவச சாப்பாடு டோக்கன் பெற்று தேவஸ்தான அன்னதான சத்திரத்தில் உணவு அருந்தி வந்தனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள ஓட்டல்களில் ருசிகரமான சாப்பாடு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த குறையை போக்க திருமலைக்கு வந்து செல்லும் அனைத்து தரப்பு பக்தர்களுக்கும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தேவஸ்தான போர்டில் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து திருமலை அன்னதான சத்திரத்தில் நடந்த எளிய நிகழ்ச்சியில் போர்டின் சேர்மேன் கருணாகர ரெட்டி, நிர்வாக அதிகாரி ரமணாச்சாரி, சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இலவச உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை பக்தர்கள் அதிகரிக்கும் தினங்களில் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் இங்கு இலவசமாக உணவு அருந்தினர். தற்போது டோக்கன் முறையை ரத்து செய்துள்ளதால் இலவச உணவு சாப்பிடும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமலையில் பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் நடைபெறும் நேரங்களில் ஒரே இடத்தில் 15 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் விதத்தில் பெரிய அளவில் அன்னதான சத்திரம் கட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது
நன்றி தினமலர்
No comments:
Post a Comment