Friday, June 20, 2008

திமுகவே மாபெரும் வன்முறை கட்சி என்று பாமக குற்றச்சாட்டு

பா.ம.க. பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

( மாலைசுடர் செய்தி )
பாமக ஒருபோதும் வன்முறையில் ஈடுபட்டதில்லை என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். திமுகதான் வன்முறை கட்சி என்றும் அவர் காட்டமாக கூறினார். பாமகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
.
பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: பாமக ஒரு போதும் வன்முறையை விரும்பியதில்லை. கடந்த 17 ஆண்டு காலத்தில் வன்முறையில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஆனால் திமுக வன்முறையில் ஈடுபட்ட கட்சி என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன.

1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். பழ.நெடுமாறன் உள்ளிட்ட சில தலைவர்கள் அவரை காப்பாற்றினார்கள்.

இந்த தாக்குதலின் போது அப்துல் காதர் என்ற காங்கிரஸ் பிரமுகர் கண் பறிபோனது.
மதுரையில் பேச முடியாமல் திரும்பிய இந்திரா காந்தி திருச்சிக்கு சென்றார். அப்போது திண்டுக்கல் அருகே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் போலீஸ் அதிகாரி அவரை வழிமறித்து திருச்சிக்கு போகாதீர்கள், திமுகவினரால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறினார்.

பின்னர் திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து ரெயிலில் சென்னைக்கு அனுப்பி வைத்தார். ஜன்னல் கதவுகளை திறந்து வைக்காதீர்கள்; எல்லாவற்றையும் மூடி விட்டு செல்லுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளையே அனுப்பி வைத்தார்.

இந்திரா காந்தி சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
இந்த தகவலையெல்லாம் முன்னாள் அமைச்சர் பாவலர் முத்துசாமி அப்ரூவராக மாறி சொல்லி இருக்கிறார்.


இந்திராகாந்தி தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு நடந்த திமுக பொதுக்குழுவில், அவர் உயிரோடு திரும்ப கூடாது. மதுரையிலேயே அவரை அடித்து கொல்ல வேண்டும் என்று பேசப்பட்டதாக அவர் சொல்லி இருக்கிறார்.

அப்படிப்பட்ட இந்திரா காந்தியை நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று கூறியவர் கருணாநிதி. இப்படிப்பட்ட பழக்கம் எங்களுக்கு இருந்ததில்லை. அதேபோல எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது, அதுவரை அவரை தமிழர், திராவிடர் என்று பேசியவர்கள் பின்னர், அவர் மலையாளி என்று கூறி தமிழ்நாட்டிலிருந்த மலையாளிகளை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள்.

அண்ணாசாலையில் இருந்த சங்கம் ஓட்டல் மீது மட்டும் 6 முறை தாக்குதல் நடந்தது.
கேரளத்துக்காரர்கள் வைத்திருந்த அனைத்து டீக்கடைகளையும் மூடிவிட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது மும்பையில் மற்ற மாநிலத்தவர்கள் மீது நடப்பது போல அப்போது இங்கும் நடந்தது.

1989ல் பாமக தொடங்கப்பட்ட பிறகு இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி எப்போதாவது நடந்ததா? எங்களைப்போய் வன்முறைக் கட்சி என்று முத்திரைகுத்த முதலமைச்சரே உங்களுக்கு எப்படி மனம் வந்தது? எம்ஜிஆர் நடித்த "நேற்று இன்று நாளை' திரைப்படத்தை ஓட முடியாமல் செய்தது திமுக தான்.

அப்போது திமுகவில் இருந்த எஸ்எஸ்ஆர் செயற்குழு கூட்டத்திற்கு அடிபட்டு ரத்தக்கறையுடன் வந்ததையெல்லாம் நினைவுப்படுத்தி பாருங்கள். தமிழக மக்கள் இன்று வரை போற்றி புகழும் பெருந்தலைவர் காமராஜரை பற்றி திமுக மேடைகளில் எவ்வளவு கேவலமாக பேசினீர்கள். அவரை தோற்கடிக்க என்னவெல்லாம் செய்தீர்கள், எப்படி எல்லாம் பேசினீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எந்தநிலையிலும் உங்களிடம் நட்பு பாராட்டி தோழமை கொண்டிருந்த எங்களை பார்த்து குழி பறிப்பவன் என்று சொல்வது நியாயமா? எங்கள் இனத்து மக்களிடம் குருவி போல சிறுசிறுக சேர்த்து எங்கள் இன மக்களுக்காக கட்டிய கல்விக் கோயிலை உங்களை வைத்துத்தானே திறக்க செய்தோம். அதனை போய் புறம்போக்கு நிலத்தில் கட்டியது என்று ஒரு மூத்த அமைச்சரே பேசுகிறாரே இது நியாயமா?

அதை நான் பொறுத்து கொள்ளலாம். மாவீரனால் (காடுவெட்டு குரு) பொறுத்து கொள்ள முடியுமா? நாங்கள் நடத்தும் மக்கள் தொலைக் காட்சி, தமிழ் ஓசை ஆகியவற்றையும் உங்களை வைத்துதானே திறக்க செய் தோம். உங்கள் மீது எங்களுக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் உண்டு.

நான் முதலமைச்சரை பற்றியும், இந்த அரசைப்பற்றியும் அடிக்கடி விமர்சித்து பேசுவதால் உங்கள் மீது மாறாத அன்பு கொண்டுள்ள மத்திய அமைச்சர் அன்புமணி, அவருடைய அம்மாவிடம் போய், ஐயாவை கடுமையாக விமர்சிக்கக்கூடாது, அவர் ஒரு மூத்த தலைவர் என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி தனிப்பட்ட முறையில் உங்கள் மீது அன்புபாராட்டிய அன்புமணிக்கு ஜிப்மர் மற்றும் அகில இந்திய மருத்துவ மையம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட போது, ஒரு வார்த்தை நீங்கள் ஆறுதல் சொன்னீர்களா?

அன்புமணி கவலைப்படாதே, எதையும் துணிந்து செய், நான் பார்த்து கொள்கிறேன் என்று நீங்கள் குறிப்பிட்டதுண்டா? அவருடைய நல்ல செயலை நீங்கள் பாராட்டியது உண்டா? ஒரு தேர்தல் பொது கூட்டத்தில் உங்கள் மனச்சாட்சியின் மகன் ஒரு தலைவரை பற்றி மிக மோசமாக பேசிய போது அவரை உங்கள் கட்சியில் எடுத்து கொள்ளுங்கள்.

அன்புமணி எங்கள் கட்சிக்கு என்று கூறினீர்களே, அப்படிப்பட்ட அன்புமணியை எப்படி நடத்தினீர்கள்? இப்படிப்பட்ட எங்களை துரோகி என்று கூறுவது அடுக்குமா? நியாயமா?
பாமகவை எவராலும் அழிக்க முடியாது. அவர்களின் கனவு நிறைவேறாது.மக்கள் சக்தியோடு பாமக வெற்றி பெறும்.

1 comment:

Anonymous said...

pot calling kettle black