Thursday, June 19, 2008

திமுக திருந்தவில்லை - வன்னிய சங்க கூட்டத்தில் ராமதாஸ் அறிக்கை

இனி இல்லை எல்லை, அதிகமாக குரல் கொடுப்போம்: ராமதாஸ்
புதன்கிழமை, ஜூன் 18, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற




சென்னை: இனி இலக்குமணன் கோடு என்கிற எல்லைக்கோடு எங்களுக்கு இல்லை. மக்கள் பிரச்சினைகளுக்காகவும், மாநில நலனுக்காகவும் இன்னும் அதிகமாக குரல் கொடுப்போம். எங்களது பயணம் நேரானது, லட்சியம் உறுதியானது. அதிலிருந்து கிஞ்சித்தும் மாற மாட்டோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நேற்று நடந்த திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் பாமகவுடன் இனியும் உறவைத் தொடருவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு மேற்கொண்டுள்ள முடிவைப் பார்க்கையில், இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்கிறார்கள் என்ற புகழ் பெற்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

திமுக எடுத்துள்ள இந்த முடிவுக்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினையில் எங்களது தரப்பு வாதங்களையும், அதில், உள்ள நியாயங்களையும் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

ஏற்கனவே நான் சுட்டிக் காட்டியபடி இந்த விவகாரம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு நிீகழ்வு பற்றியது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடித்து வைக்கப்பட்டு விட்ட விவகாரம். இன்னும் சொல்லப் போனால் கலைஞரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விவகாரம். ஆனாலும், ஆறு மாதங்கள் கழித்து அதனைப் பிரச்சினையாக்கி அரசியலாக்கியிருக்கிறார்கள்.

தனி மனித விவகாரங்களை, தனி மனிதர்கள் மீது ஏற்படும் கோபதாபங்களை அரசியலாக்கி அதை முன்னிறுத்தி கசப்பான அரசியல் முடிவுகளை அறிவிப்பது என்பது திமுகவுக்குப் புதிதல்ல.

சங்கரய்யாவை ஒதுக்கிய திமுக:

முன்பு ஒருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் எஸ்.சங்கரய்யா பொறுப்ேபற்று செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அவர் மீதுஏற்பட்ட தனிப்பட்ட கோபத்தின் காரணமாக, அந்தப் பொறுப்பில் அவர் இருக்கும் வரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்துச் செயல்பட்டது திமுக. இப்போது அந்த சரித்திரம் திரும்பியிருக்கிறது. திமுக இன்னும் திருந்தவில்லை என்பதை மீண்டும் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது.

கூட்டணி என்கிறார்கள், தோழமைக் கட்சி என்கிறார்கள். ஆனால் முடிவை மட்டும் அவர்களே மேற்கொள்கிறார்கள். ஏன் என்று கேட்டால் நடப்பது திமுக ஆட்சிதானே என்று முதல்வர் கூறுகிறார். திமுக ஆட்சியில் திமுகவினர் முடிவு எடுக்கிறார்கள்.

அவர்கள் எடுக்கும் அத்தனை முடிவுகளையும் நட்புக் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால் பிறகு நட்புக் கட்சிகள் தனியாக ஏன் கட்சி நடத்திக் கொண்டிருக்க வேண்டும். கட்சிகளைக் கலைத்து விட்டு திமுகவோடு இணைந்து கூட்டத்தோடு கூட்டமாக வாழ்கு என்று குரல் கொடுத்துக் கொண்டுதானே இருக்க வேண்டும்.

இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திமுக விரும்புகிறது என்பதைத்தான் அவர்கள் மேற்கொண்டுள்ள முடிவு எடுத்துக் காட்டுகிறது. அதற்கு எப்போதோ நடந்து விட்ட ஒரு நிகழ்வை இன்னும் சொல்லப் போனால், எப்போது முடித்து வைக்கப்பட்டு விட்ட நிகழ்வைக் காரணம் காட்டி பிரச்சினையைத் திசை திருப்பி பாமக மீது பழி சுமத்தியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு முடிவை திமுக எடுத்து விட்டதே என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஏனெனில் திமுகவின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை. இதுவரை எங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள் நின்று செயல்பட்டுக் கொண்டிருந்தோம்.

தோழமை என்கிற உணர்வு அவ்வப்போது குறுக்கிட்டதால், சில பிரச்சினைகளில் சுதந்திரமாக எங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியாமல் இருந்து வந்தது. இப்போது இலக்குமணன் கோடு என்கிற எல்லைக் கோடு இனி எங்களுக்கு இல்லை. மக்கள் பிரச்சினைக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் இன்னும் அதிகமாக குரல் கொடுப்போம். எங்கள் பயணம் நேரானது, லட்சியம் உறுதியானது. அதிலிருந்து கிஞ்சித்தும் மாற மாட்டோம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

முன்னதாக வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று காலை டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

No comments: