Thursday, June 19, 2008

கோவை மாவட்ட திமுக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை மாவட்ட திமுக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
வியாழக்கிழமை, ஜூன் 19, 2008

நன்றி தட்ஸ்டமில்

கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை மற்றும் வடகோவை மேம்பாலம் சந்திக்கும் இடத்தில் மாவட்ட திமுக அலுவலகம் உள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்காக அலுவலக வளாகத்தில் முன்புறமாக பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது.

நேற்று இரவு அலுவலகத்தை பூட்டிக் கொண்டு, அலுவலக ஊழியர் தண்டபாணி (வயது 42) உள்ளே தூங்கினார். இன்று அதிகாலை 4 மணியளவில் அலுவலகத்தின் மீது கற்கள் வீசப்பட்டது.

இதையடுத்து தண்டபாணி எழுந்து கதவை திறந்து பார்த்தார். ஆனால், யாரையும் காணவில்லை. பின்னர் மீண்டும் படுக்க சென்றார். அடுத்த 10 நிமிடத்தில் முன்புறத்தில் போடப்பட்டிருந்த பந்தல் தீப்பிடித்து எரிந்தது.

இதைப் பார்த்த பக்கத்து கட்டிட காவலாளி சுப்பிரமணியம் சத்தம் போட்டு தண்டபாணியை எழுப்பினார். ஆனால் அதற்குள் மளமளவென தீப்பற்றி பந்தல் எரிந்துபோனது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கும், காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இருப்பினும் பந்தலின் நடுப்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட திமுக பொருளாளர் நாச்சிமுத்து, துணை காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, தீப்பிடிக்க வைத்தது தெரிய வந்தது. வீசப்பட்ட கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

திமுக கூட்டணியிலிருந்து பாமக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, காடுவெட்டி குருவையும், ராமதாசையும் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தும், பாமகவை விலக்கிய கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தும் நேற்று கோவை நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன

இந்தப் பின்னணியில் திமுக அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதால், பாமகவினருக்கு இதில் தொடர்பு இருக்கலாமா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: