பா.ஜ., தலைவர் அத்வானி உயிருக்கு ஆபத்து! *தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்
புதுடில்லி:பா.ஜ., தலைவர் அத்வானி மேற்கொள்ளும் `சங்கல்ப யாத்திரை'யின் போது, பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், யாத்திரையும், அது தொடர்பான நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பா.ஜ., தலைவர் அத்வானி, தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநில சட்டசபை தேர்தலும், அடுத்த ஆண்டில் லோக்சபா தேர்தலும் நடக்கவுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளை துவங்குவதற்கு முன்னோட்டமாக, இன்று (பிப்., 6) மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரிலிருந்து, நாடு தழுவிய சங்கல்ப யாத்திரை'யை அத்வானி துவங்கவுள்ளதாகவும், இரண்டு மாதங்களுக்கு மேல் நடக்கும் இந்த யாத்திரையில், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களில் அத்வானி கலந்து கொண்டு பேசவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விகளை, அவர் மக்களிடம் எடுத்துக் கூறுவார் எனவும் பா.ஜ., அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
யாத்திரை துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள், ஜபால்பூரில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், நேற்று முன்தினம் இரவு அத்வானியை சந்தித்து பேசியதாக மீடியாக்களில் செய்தி வெளியானது. இந்த சந்திப்பில், யாத்திரையின் போது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனால், இன்னும் சில மாதங்களுக்கு, பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது' என அத்வானியிடம், நாராயணன் கூறியதாக செய்திகள் வெளியாயின.மீடியாக்களில் வெளியான இந்த செய்தியால், பா.ஜ., வட்டாரத்தில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், யாத்திரை ஒத்தி வைக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதை நேற்று மாலை பா.ஜ., கட்சியும் உறுதி செய்தது.
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அறிவுரையை ஏற்க மறுப்பது, இந்த நேரத்தில் புத்திசாலித்தனமில்லை என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, சில காலத்திற்கு யாத்திரையை ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளோம். எனினும், திட்டமிட்டபடி ஜபால்பூரில் துவக்க விழா நடைபெறும்.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.
உள்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், பா.ஜ., தலைவர் அத்வானியை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், விழாக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் உளவு அமைப்புகளுக்கு உடனடியாக தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளோம். இது வழக்கமான நடவடிக்கை தான்' என்றார்.
1 comment:
தைரியமான தலைவர் அத்வானி!
Post a Comment